சிங்கப்பூரின் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், புதிய அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களைத் தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
உலகம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், இந்த வரவுசெலவுத் திட்டம் நமது தேசியக் கட்டமைப்பின் அடுத்தக்கட்டத்தை வடிவமைப்பதாகத் தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
சமுதாய ஒப்பந்தத்தை வலுப்படுத்துவது, குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது, அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரர்கள் வாழ்க்கைச் செலவின நெருக்குதல்களைச் சமாளிக்க உதவுவதில் அரசாங்கத்தின் தொடர் உறுதிப்பாட்டை அவர் சுட்டிகாட்டினார். தேவைப்படும் வரை இந்த உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள கூடுதல் ஆதரவு நடவடிக்கைகளையும் அவர் குறிப்பிட்டார். $400 வரையிலான வாழ்க்கைச் செலவின சமாளிப்பு சிறப்புத் தொகை, கூடுதல் ‘யூசேவ்’ பற்றுச்சீட்டுகள், அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் $500 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகள் ஆகியவை இதில் அடங்கும்.
“மாறிவரும் உலகில் ஒன்றிணைந்து நமது எதிர்காலத்தைப் பாதுகாப்போம்,” என்று பதிவிட்ட அவர், உடனடி நிவாரணத்துடன் நீண்டகால மீள்திறனிலும் கவனம் செலுத்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் 2026 வரவுசெலவுத் திட்டம் குறித்த தமது கருத்துகளைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
சிக்கலான, நிச்சயமற்ற உலகச் சூழலைச் சிங்கப்பூரர்கள் சமாளிக்க உதவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை அவர் சுட்டிகாட்டினார். அதே வேளையில், நாட்டைப் பொருளியல் ரீதியாக ஈர்ப்புமிக்கதாக வைத்திருப்பதையும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மக்கள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தவும், முதுமையிலும் சிறப்பாக வாழவும் இந்த வரவுசெலவுத் திட்டம் உதவும் என்று திரு லீ குறிப்பிட்டார். மேலும், சிங்கப்பூரை ஓர் ஐக்கியமான, பல்லின, பல சமய நாடாக உருவாக்கும் கோட்பாடுகளையும் பகிர்ந்துகொள்ளப்பட்ட விழுமியங்களையும் இது வலுப்படுத்தும் என்றார்.
“நமது பொருளியல் உத்தியைப் புதுப்பிக்கவும் ஊழியர்கள், வர்த்தகங்கள், குடும்பங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் திட்டங்களை வகுத்துள்ளார்,” என்று மூத்த அமைச்சர் லீ எழுதினார்.
வரவிருக்கும் சவால்களைச் சமாளிக்கவும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த வரவுசெலவுத் திட்டம் நம்மைத் தயார்படுத்தும் என்று அவர் கூறினார்.
நாடு ஒன்றிணைந்து எதிர்காலத்தைக் கட்டமைக்கும் வேளையில், ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் ஆதரவளிப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

