சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் போற்றும் 2026 தேசிய தின அணிவகுப்பு பாடல் தொகுப்பு

சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் போற்றும் 2026 தேசிய தின அணிவகுப்பு பாடல் தொகுப்பு

3 mins read
8efc3689-48bd-44da-b3ea-e4d22e4c2736
சிங்கப்பூரின் 61ஆம் ஆண்டு தேசிய தினத்திற்காக உருவாக்கப்பட்ட ‘ஹார்ட்பீட்ஸ்’ குறுநாடகத்தில் இடம்பெறும் பாடல்களைப் பாடும் கலைஞர்களின் நேரடி ஒலிப்பதிவுச் செயல்விளக்கம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

இவ்வாண்டு வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தின அணிவகுப்பிற்காக பல பாடல்களைக் கொண்ட முழுமையான இசைத் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 61ஆம் ஆண்டு தேசிய தினத்தை முன்னிட்டு ‘தொடுவானம் நோக்கி: என்டிபி 2026 பாடல் தொகுப்பு’ (Go Beyond: NDP 2026 Album) என்ற முழுமையான இசைத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல ஒரே ஒரு தலைப்புப் பாடலை மட்டும் வெளியிடாமல், மக்களின் மாறுபட்ட ரசனைகளுக்கேற்ப பலதரப்பட்ட இசை பாணிகளில் உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு மூன்று வேறுபட்ட தலைப்புப் பாடல்கள் இம்முறை உருவாக்கப்பட்டுள்ளன.

‘ஜயன்ட்ஸ்’ (Giants), ‘ஸ்பார்க்கல்’ (Sparkle), ‘யூ வில் பி ஓகே’ (You’ll Be Okay) ஆகிய அந்த மூன்று தலைப்புப் பாடல்கள் ஏற்கெனவே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவற்றைத் தொடர்ந்து, மேலும் பல புதிய பாடல்கள் வரும் ஜூலை மாதத்தில் படிப்படியாக இந்தத் தொகுப்புடன் இணைக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் தொகுப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஜூன் 11) இன்ஃபினிட் ஸ்டூடியோஸ் வளாகத்தில் நடைபெற்றது. இசையமைப்பாளர்களின் நேரடிப் பதிவுகள், பாடகர்களின் சிறப்புப் படைப்புகள், இசை இயக்குநரின் விளக்கங்கள் ஆகியவை இந்தச் சந்திப்பில் இடம்பெற்றன.

“இந்த ஆண்டு எங்கள் எல்லைகளைத் தாண்டி எங்களுக்கு நாங்களே சவால்விட நினைத்தோம்,” என்று அணிவகுப்புப் பாடல்கள் குறித்து இந்த ஆண்டுக்கான இசை இயக்குநர் பாங் வென்ஃபூ பேசினார்.

‘தொடுவானம் நோக்கி: என்டிபி 2026 பாடல் தொகுப்பின்’ (Go Beyond: NDP 2026 Album) இசை இயக்குநர் பாங் வென்ஃபூ.
‘தொடுவானம் நோக்கி: என்டிபி 2026 பாடல் தொகுப்பின்’ (Go Beyond: NDP 2026 Album) இசை இயக்குநர் பாங் வென்ஃபூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஒரே மாதிரியான சமூகமன்று எனக் குறிப்பிட்ட அவர், இங்குப் பலதரப்பட்ட கலாசாரங்கள், சிந்தனைகள், ரசனைகள் உள்ளன என்றார். மக்களின் மாறுபட்ட ரசனைகளுக்கு ஏற்ப பல பாடல்களை உருவாக்குவதன் மூலம், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய முடியும் என்று அவர் கூறினார்.

கலைஞர்கள் தங்களுக்குரிய பாணியில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டதாகத் திரு பாங் தெரிவித்தார்.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘ஸ்பார்க்கல்’ பாடலை இணைந்து எழுதிப் பாடியுள்ளனர் சிங்கப்பூர் இசைக் கலைஞர்களான கரேத் ஃபெர்னாண்டசும் ட்ரூ செனும்.

‘ஸ்பார்க்கிள்’ பாடலை இணைந்து எழுதிப் பாடியுள்ளனர் சிங்கப்பூர் இசைக் கலைஞர்களான கரேத் ஃபெர்னாண்டசும் (இடம்) ட்ரூ செனும்.
‘ஸ்பார்க்கிள்’ பாடலை இணைந்து எழுதிப் பாடியுள்ளனர் சிங்கப்பூர் இசைக் கலைஞர்களான கரேத் ஃபெர்னாண்டசும் (இடம்) ட்ரூ செனும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தினப் பாடலை உருவாக்கியது தமக்குக் கிடைத்த கனவு நனவான தருணம் எனக் கூறிய கரேத், இப்பாடலின் வரிகள் சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கைச் சவால்களை கடந்து செல்ல ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மக்களுக்கு நேர்மறையான ஆற்றலை வழங்குவதே தமது இசையின் முக்கிய நோக்கம் என ட்ரூ குறிப்பிட்டார்.

தேசிய தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முதன்முறையாக ஹார்ட்பீட்ஸ்’ (Heartbeats) என்ற குறுநாடகம் இவ்வாண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கையையும் தேசப்பற்றையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடகம், பாடல்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நான்கு பெண்களை உள்ளடக்கிய ‘ஷியோக் சிஸ்டாஸ்’ (Shiok Sistas) குழுவினராகக் கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர். அத்துடன், ‘சிங்கப்பூர் டவுன் - டப்பாவ்’ (Singapore Town - Tapau) என்ற பாடலையும் அவர்கள் இணைந்து பாடியுள்ளனர்.

‘ஷியோக் சிஸ்டாஸ்’ குழு உறுப்பினர்களான (இடமிருந்து) ஜாலின் ஹான், ஜாக்குலின் பெரேரா, எய்ட்லி மோஸ்பிட், அனிதா அய்யாவு.
‘ஷியோக் சிஸ்டாஸ்’ குழு உறுப்பினர்களான (இடமிருந்து) ஜாலின் ஹான், ஜாக்குலின் பெரேரா, எய்ட்லி மோஸ்பிட், அனிதா அய்யாவு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பன்முகச் சமூகத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த இப்பாடல், அனைவரையும் சென்றடையும் என அக்குழுவில் இடம்பெற்றுள்ள உள்ளூர் பிரபலமும் பன்முகக் கலைஞருமான அனிதா அய்யாவு நம்பிக்கை தெரிவித்தார்.

1980களில் சிறுமியாக இருந்தபோது தேசிய தின அணிவகுப்பில் இந்தியப் பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதை அவர் நினைவுகூர்ந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேசத்தின் கொண்டாட்டத்தில் ஓர் அங்கமாக இணைந்திருப்பது மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

‘ஷியோக் சிஸ்டாஸ்’ குழு உறுப்பினரான உள்ளூர் பிரபலமும் பன்முகக் கலைஞருமான அனிதா அய்யாவு.
‘ஷியோக் சிஸ்டாஸ்’ குழு உறுப்பினரான உள்ளூர் பிரபலமும் பன்முகக் கலைஞருமான அனிதா அய்யாவு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
இளம்பருவத்தில்  அனிதா அய்யாவு.
இளம்பருவத்தில் அனிதா அய்யாவு. -

“சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் மீண்டும் பங்கேற்பது பெருமையளிக்கிறது,” என்று திருவாட்டி அனிதா கூறினார்.

நாட்டைப் பிரதிநிதிப்பது குறித்து பெருமிதத்துடன் பேசிய அவர், “1998ஆம் ஆண்டு மாடலிங் (modelling) போட்டியில் வென்றபோதிலிருந்தே நாட்டுப்பற்று என்னுள் வேரூன்றியுள்ளது. என் இறுதி மூச்சுவரை அதனை நான் நெஞ்சில் பெருமையுடன் சுமப்பேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்