2026ல் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்நுட்பத் துறைக்குப் பெரும்பங்கு

2026ல் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்நுட்பத் துறைக்குப் பெரும்பங்கு

2 mins read
3e812e24-824c-42c0-b98e-66a664432055
விண்வெளி மற்றும் நிதி, காப்புறுதித் துறைகள் போன்ற தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது. - படம்: மைக்ரான் டெக்னாலஜி

தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சில்லுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், 2025ஆம் ஆண்டைவிட, 2026ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களின் உற்பத்தி போன்ற தொழில்நுட்பம் தொடர்பான செயல்பாடுகள் அதிக பங்கைக் கொண்டிருக்கக்கூடும்.

விண்வெளி மற்றும் நிதி, காப்புறுதித் துறைகள் போன்ற தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் (ஜிடிபி) பங்களிக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம், வியாழக்கிழமை (ஜனவரி 29) அன்று வெளியிட்ட அதன் பெருநிலைப் பொருளியல் மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது.

“உலகளாவிய ஏஐ ஆதரவு அம்சங்கள் சிங்கப்பூரின் வர்த்தகம் தொடர்பான துறைகளுக்குக் குறுகிய கால ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஏஐ’ மாதிரிகளுக்கான பெரிய தரவுத்தொகுப்புகளைச் சேமிப்பதற்கு அவசியமான நினைவுச் சில்லுகளின் உள்ளூர் உற்பத்தியையும், ‘ஏஐ’ பணிச்சுமைகளை ஆதரிக்கும் சேவையகங்கள், கூறுகள் மற்றும் கட்டமைப்பு உபகரணங்களின் உற்பத்தியையும் ஆணையம் மேற்கோள் காட்டியது.

“இன்னும் விரிவாகச் சொல்லப்போனால், 2025ஆம் ஆண்டைவிட இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பம் தொடர்பான பிரிவுகள் அதிக பங்களிப்பை வழங்கக்கூடும்,” என்று ஆணையம் விவரித்தது.

தொழில்நுட்பம் தொடர்பான பிரிவுகளில் மின்னணுவியல், இயந்திரங்களின் உற்பத்தி; மின்னணுக் கூறுகள், தொலைத்தொடர்பு உபகரணங்கள், கணினிகளின் மொத்த வர்த்தகம்; தகவல் தொழில்நுட்பம், தகவல் சேவைகள் ஆகியவை அடங்கும்.

சேவைத் துறையில், நிதி, காப்புறுதித் துறை பொதுவாக இணக்கமான பொருளியல், நிதி நிலைமைகளால் ஆதரிக்கப்படும் என்று ஆணையம் கூறியது.

பெரும்பாலான பெருநிலைப் பொருளியல்களில் பண தளர்வுச் சுழற்சிகள் முடிவை எட்டினாலும், கடன் அளவுகளின் வளர்ச்சி 2026ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் குறைந்தபட்சம் மீள்தன்மையுடன் இருக்கும் என்றும் பின்னர் மிகவும் குறைந்த வேகத்தில் விரிவடையும் என்றும் ஆணையம் எதிர்பார்க்கிறது.

2025ஆம் ஆண்டில் 4.8 விழுக்காடாக இருந்த வலுவான வளர்ச்சியிலிருந்து மிதமானதாக இருந்தாலும், சிங்கப்பூர்ப் பொருளியல் வளர்ச்சி குறுகிய காலத்தில் மீள்தன்மையுடன் இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டில் நாட்டின் பொருளியல் ஒரு விழுக்காடு முதல் மூன்று விழுக்காடு வரை மெதுவான வேகத்தில் விரிவடையும் என்று வர்த்தக, தொழில் அமைச்சின் கணிப்புகள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்