2027 முதல் பிடிஓ கட்டுமானப் பணிகளில் அதிநவீனத் தொழில்நுட்பங்கள்

2027 முதல் பிடிஓ கட்டுமானப் பணிகளில் அதிநவீனத் தொழில்நுட்பங்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Sep 2026 - 10:26 pm

2 mins read

தேவைக்கேற்பக் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளின் (பிடிஓ) கட்டுமானப் பணிகளில் எந்திரவியல், தானியக்க முறை போன்ற அதிநவீனத் தொழில்நுட்பங்கள் 2027ஆம் ஆண்டு முதல் அதிக அளவில் பயன்படுத்தப்பட உள்ளன.

இதன் மூலம் புதிய வீடுகளைக் கட்டும் பணிகள் முடுக்கிவிடப்படும். இந்த நடவடிக்கைகள் கட்டுமான உற்பத்தித்திறனை அதிகரிக்கும். மேலும் மனிதவளத் தேவையையும் கணிசமாகக் குறைக்கும்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் இந்தத் தகவலை அறிவித்தார்.

ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வீடமைப்பு வளர்ச்சிக் கழக விருது வழங்கும் விழாவில் அவர் பேசினார்.

நாம் விரைவாக வீடுகளைக் கட்டும்போது, அதிகத் திறன்மிக்க முறைகளைக் கையாள வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

தொழில்நுட்பங்கள் நமது கட்டுமானத் தளங்களில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தரையைச் சமன் செய்யும் பணிகளுக்கு எந்திரங்களைப் பயன்படுத்துவது அத்தகைய ஒரு முயற்சியாகும். எந்திரங்கள் ஒளியுணரிகளைக் கொண்டு தரையைச் சமன் செய்கின்றன.

புக்கிட் மேரா, கிம் மோ ஆகிய இடங்களில் உள்ள இரு பிடிஓ திட்டங்களில் கீழ் வரும் எண்பது வீடுகளில் இரண்டு எந்திரங்கள் சோதிக்கப்பட்டன. 2027ஆம் ஆண்டில், அந்த எந்திரங்கள் மேலும் நான்கு திட்டங்களில் சோதிக்கப்படும்.

2027ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு விடப்படும் பிடிஓ கட்டுமானத் தளங்களில் பாதி இடங்களில் தற்காலிக மின்தூக்கிகள் பயன்படுத்தப்படும்.

அவை கட்டடங்களுக்கு வெளியே பொருத்தப்படும். அவற்றில் பாதுகாப்பு உணர்விகளும் கேமராக்களும் இருக்கும்.

ஊழியர்கள் பாதுகாப்புக் கவசங்களை அணிந்துள்ளதை இவை உறுதி செய்யும். பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் மின்தூக்கியின் கதவு மூடப்படாது. ஒருவரே மூன்று மின்தூக்கிகளைக் கண்காணிக்க முடியும். இதனால் மனிதவளம் பெரிதும் மிச்சப்படுத்தப்படும்.

புதிய பிடிஓ திட்டங்கள் அனைத்திலும் அந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
பிடிஓகட்டுமானம்வீவக