அனைத்துப் பாலர் பள்ளிகளுக்கும் 2028 முதல் 2030 வரை புதிய முழுநாள் மாதிரித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டில் ரிவர்வேல், வெஸ்ட் வியூ ஆகிய இரு பாலர் பள்ளிகளில் அது ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சு புதன்கிழமை (அக்டோபர் 28) தெரிவித்தது.
இந்தப் புதிய திட்டத்தின்கீழ், தாய்மொழி வழியிலான விளையாட்டு, வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் இடம்பெறும்.
தற்போது கல்வி அமைச்சு நடத்தும் 56 பாலர் பள்ளிகளில் நான்கு மணிநேர வகுப்புகள் மட்டுமே இடம்பெறுகின்றன. முழுநாள் பாலர் பள்ளிக் கல்விச் சேவை தேவைப்படும் பெற்றோர், வெளி நிறுவனங்கள் நடத்தும் பாலர் பராமரிப்புச் சேவையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
புதிய திட்டத்தில் கற்றல், விளையாட்டு, பராமரிப்பு ஆகிய மூன்றும் கல்வி அமைச்சால் நேரடியாக ஒருங்கிணைக்கப்படும்.
இத்திட்டத்தின் வழி, பள்ளிகள் வார நாள்களிலும் பள்ளி விடுமுறைக் காலங்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். முழுநாள் சேவை தேவையில்லாத பெற்றோர் காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலான அரைநாள் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
குடும்பங்களுக்குத் தரமான, கட்டுப்படியாகக்கூடிய பாலர் கல்வியை வழங்கும் அரசாங்க முயற்சிகளின் ஓர் அங்கமாக இத்திட்டம் அமைகிறது என்றார் கல்வி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி.
வெஸ்ட் வியூ தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் பாலர் பள்ளிக்கு வருகை புரிந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
“வசதி குறைந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளும் இத்திட்டத்தின் வழி பயனடைவார்கள்,” என்றார் அவர்.
கல்வி, விளையாட்டு, பராமரிப்பு ஆகியவை ஒரே திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும். அமைச்சால் பணியமர்த்தப்பட்ட பாலர் பள்ளித் திட்ட அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள்.
“பெற்றோர், ஆசிரியர்களிடம் பெறப்பட்ட கருத்துகள், பாலர் கல்வித் துறையில் உருவாகி வரும் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன,” என்றார் திரு சையது.
பாலர் பள்ளி மாணவர்கள் கிட்டத்தட்ட 8,000 பேரில் 65 விழுக்காட்டினர் தற்போது வெளி நிறுவனங்கள் நடத்தும் பாலர் பராமரிப்புச் சேவையைப் பயன்படுத்துவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கூடுதல் பணியாளர்களை நியமிக்க உள்ளதாகவும், ஒவ்வொரு பாலர் பள்ளிக்கும் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், திட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை மாணவர் சேர்க்கையைப் பொறுத்து அமையும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
இவ்வாண்டின் தேசிய தினப் பேரணியில், பாலர் பள்ளிகளில் முழுநாள் குழந்தைப் பராமரிப்புக் கட்டணத்தை 2030ஆம் ஆண்டுக்குள் குறைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்துக் குடும்பங்களுக்கும் தரமான, கட்டுப்படியாகக்கூடிய பாலர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
ஆசிரியர்களின் வேலைப்பளுவைப் பற்றிப் பேசிய திரு சையது, “அவர்களின் பணிச்சுமையை எவ்வாறு சிறந்த முறையில் ஆதரிக்கலாம் என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்றார்.
“ஏனென்றால், நமது ஆசிரியர்களை நாம் எவ்வளவு சிறப்பாகக் கவனித்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமது மாணவர்கள் தொடர்ந்து பயனடைவார்கள்,” என்றார் அவர்.
