கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம் வரை அக்கிருமித் தொற்றுக்கு ஆளான 2,102 பேர் மாண்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த எண்ணிக்கை குறைவு என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும், கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூர் சிறப்பாகச் செய்திருந்தாலும் கொள்ளைநோய்ப் பரவல் அந்தந்த வயதுப் பிரிவுகளில் இடம்பெறும் மரண விகிதத்தை அதிகரிக்க வைத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஒவ்வொரு 1,000 குடியிருப்பாளர்களிலும் மரணமடைந்தோரின் விகிதம் 5.9 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. அந்த விகிதம் அதிகமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ல் அந்த விகிதம் 5.2 விழுக்காடாகவும் 2021ல் 5.6 விழுக்காடாகவும் பதிவானது. 2023ல் மீண்டும் 5.6 விழுக்காட்டுக்குக் குறைந்தது.
கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ள மரண எண்ணிக்கை குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதார அமைச்சு புள்ளி விவரங்களுடன் பதிலளித்தது.
சென்ற ஆண்டு மொத்தம் 26,888 பேர் மாண்டனர். அந்த எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டு பதிவானதைவிட 0.01 விழுக்காடே குறைவு. குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட பிறப்பு, இறப்புப் பதிவு அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
2023ன் மரண எண்ணிக்கை 2021ல் பதிவானதுடன் ஒப்பிடுகையில் 10.7 விழுக்காடு அதிகமாகும். 2020ஆம் ஆண்டு 22,054 பேர் மாண்டனர்.
காலப்போக்கில் பதிவாகும் இறப்பு விகிதத்தின் போக்கை ஆராய மொத்த மரண எண்ணிக்கைக்குப் பதிலாக அந்தந்த வயதுப் பிரிவுகளில் இடம்பெறும் மரண விகிதம் கருத்தில்கொள்ளப்படுகிறது. அது, மூப்படையும் சமூகம் போன்ற மக்கள்தொகையில் மாறிவரும் அம்சங்களால் ஏற்படும் தாக்கத்தையும் தாண்டி நிலவரத்தை எடுத்துக்காட்டும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரில் பதிவாகும் மொத்த மரண எண்ணிக்கையை முன்பு பதிவானதுடன் ஒப்பிடுவது சரியாகாது; சிங்கப்பூரின் மக்கள்தொகை விரைவில் மூப்படைவது அதற்குக் காரணம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யூஎஸ்) சோ சுவீ ஹோக் சுகாதாரப் பள்ளியின் ஆய்வுப் பிரிவுக்கான இணைத் துறைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் துணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் கூறினார். கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலின் தாக்கத்தைக் கருத்தில்கொள்ளும்போது அந்தந்த வயதுப் பிரிவிகளில் பதிவாகும் மரண விகிதம், மற்ற உயர் வருமான நாடுகளில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
2020லிருந்து 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்தந்த வயதுப் பிரிவுகளில் மரண விகிதம் அதிகரித்தது கொவிட்-19 கிருமித்தொற்றால் மட்டுமல்ல, சிலரால் ஏற்கெனவே இருக்கும் நாள்பட்ட நோய்களுக்குத் தகுந்த நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் போனதும் காரணம் என்று சோ சுவீ ஹோக் சுகாதாரப் பள்ளியின் துறைத் தலைவரான பேராசிரியர் டியோ யிக் யிங் குறிப்பிட்டார்.