மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 217 பேரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். சந்தேக நபர்கள் செய்த மோசடியால் $7.67 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பாதிக்கப்பட்டோர் பறிகொடுத்தனர்.
வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் ஏழு நிலப் பிரிவு அதிகாரிகளும் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை நடத்திய இருவாரக் கால சோதனைகளில் சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
அவர்கள் 700க்கும் அதிகமான மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. அவற்றுள், மின்வர்த்தக மோசடி, வேலை மோசடி, அரசாங்க அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்த மோசடி, முதலீட்டு மோசடி ஆகியவை அடங்கும்.
காவல்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்படுவோரில் 78 பேர் பெண்கள், 139 பேர் ஆண்கள். மோசடியில் ஈடுபட்டது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, ஏமாற்றியது, சட்டவிரோதக் கட்டணச் சேவைகள் வழங்கியது ஆகியவை தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியிலிருந்து மோசடிக்காரர்களுக்கும் மோசடிக் கும்பலால் மோசடிகளில் ஈடுபடுத்தப்படுவோருக்கும் ஆறிலிருந்து 24 பிரம்படிகள் கட்டாயம் விதிக்கப்படும் என்ற சட்டம் நடப்புக்கு வந்தது.
மோசடி மூலம் கிடைத்த கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முற்படுவோருக்கும் மோசடிக்காரர்களுக்கு சிம் அட்டைகளையும் சிங்பாஸ் விவரங்களையும் வழங்குவோருக்கும் அதிகபட்சம் 12 பிரம்படி வரை விதிக்கப்படக்கூடும்.

