தெம்பனிஸ் சில்வண்டுகள் கட்டுப்பாடு: 22,000 பூச்சியைப் பிடித்த பயனுள்ள முயற்சி

தெம்பனிஸ் சில்வண்டுகள் கட்டுப்பாடு: 22,000 பூச்சியைப் பிடித்த பயனுள்ள முயற்சி

2 mins read
1721722e-9fd1-4806-ad20-2c72451ddf77
தெம்பனிஸ் நகர மன்றத்தின் குத்தகையாளர்கள், ஏப்ரல் 23ஆம் தேதி, தெம்பனிஸ் ஸ்திரீட் 33, புளோக் 321க்கு அருகே சில்வண்டுகளைப் பிடிப்பதற்காக ஒளிப்பொறி ஒன்றை அமைத்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ் சங்காட் வட்டாரத்தில் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும் சில்வண்டுகளைத் திசைதிருப்ப ஒளிப்பொறிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த முயற்சி நல்ல பலனைத் தந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் அப்பகுதியில் பிடிக்கப்பட்ட கிட்டத்தட்ட 22,000 சில்வண்டுகளில் பெரும்பாலானவை இந்த ஒளிப்பொறிகள் மூலமே பிடிக்கப்பட்டுள்ளன.

அப்பூச்சிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த புதிய வழிகளைக் கண்டறியும் ஐந்து மாதக் கால முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 18 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் அந்த ஒளிப்பொறிகள் வைக்கப்பட்டன.

இவ்வாண்டு பிப்ரவரியில் அப்பகுதியில் இந்த பூச்சிகளின் நடமாட்டம் தொடங்கியது. மனிதர்களுக்கு அவை தீங்கற்றவை என்றாலும் நூற்றுக்கணக்கில் வீடுகளுக்குள் பறந்து வரக்கூடியவை; மேலும், அவற்றின் சத்தம் 120 டெசிபல் வரை ஒலிக்கக்கூடியது.

மக்கள் கழகம், தெம்பனிஸ் நகர மன்றம், தேசியப் பூங்காக் கழகம் ஆகிய அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5 )வெளியிட்ட கூட்டறிக்கையில், சில்வண்டுகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னோடித் திட்டம் ஊக்கமளிக்கும் முடிவுகளுடன் நிறைவடைந்துள்ளதாகவும் சத்தமும் இடையூறுகளும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

மேலும், அவற்றைக் கட்டுப்படுத்த வேறு சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. 500க்கும் மேற்பட்ட மரங்கள் அலுமினியத் தாள்கள் அல்லது நெகிழி உறைகளால் சுற்றப்பட்டது, மரங்களின் அடிப்பகுதியில் தார்ப்பாய்கள் அல்லது பாய்கள் விரிக்கப்பட்டது ஆகியவை அவற்றில் அடங்கும்.

தார்ப்பாய்கள் நிலத்திலிருந்து பூச்சிகள் வெளிவருவதைக் குறைத்தன; தாள்கள் அவை மரங்களின் மீது ஏறி உருமாறுவதைத் தடுத்தன.

சில்வண்டுகளின் முட்டைகள் உள்ள மரக் கிளைகளைக் கண்டறிந்து, அவற்றை அகற்றுவதற்கான முறைகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மேலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் புதிய பூச்சிகொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பிற உயிரினங்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அவை தீவிர மறுஆய்வுக்குப் பிறகே அமல்படுத்தப்படும் எனக் கூட்டறிக்கையில் அவை குறிப்பிட்டுள்ளன.

சில்வண்டுகள் படையெடுக்கும் காலம் முடிவடைந்தாலும், எதிர்காலப் பருவங்களைக் கையாள்வதற்கான பணிகள் தொடரும் என அத்திட்டத்தை வழிநடத்தும் தற்காப்பு அமைச்சுக்கான மூத்த துணையமைச்சரும் தெம்பனிஸ் சங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ்மண்ட் சூ தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் பெற்ற படிப்பினைகள் சிங்கப்பூரின் பிற நகர மன்றங்களுடனும் பகிர்ந்துகொள்ளப்படும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்