சட்டவிரோதமான இணையவழிச் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 23 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூர் காவற்படை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) மாலை வெளியிட்ட அறிக்கையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 15 ஆண்கள், எட்டுப் பெண்களின் வயது 23 முதல் 75க்கு இடைப்பட்டவை என்று தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று (நவம்பர் 14) மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறை, காவல்துறை உளவுப் பிரிவு, அங் மோ கியோ காவல் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள், அங் மோ கியோ அவென்யூ 5க்கு அருகிலுள்ள ஒரு தொழில் வளாகம், தீவு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தினர்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 23 பேரில், 10 பேர் சட்டவிரோதமான சூதாட்ட இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மற்ற 13 பேரும், இணையவழிச் சூதாட்டத்தை வழங்கும் சட்டவிரோத இடங்களில் சூதாட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது, அவற்றுக்கு ஏற்பாடு செய்வது அல்லது ஏற்பாடு செய்ய உதவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
மேலும், காவல்துறையினர் $70,000க்கும் அதிகமான ரொக்கம், கைப்பேசிகள், கணினிகள், சூதாட்டத்துடன் தொடர்புடைய பிற பொருள்களைக் கைப்பற்றினர். விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 23 பேரில் 14 பேர் இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டனர்.
37 முதல் 68 வயதுக்கு இடைப்பட்ட ஒன்பது ஆண்கள் மீது, சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் திங்கட்கிழமை (நவம்பர் 16) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்தச் செயலில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, சட்டவிரோதமான சூதாட்ட இடமொன்றின் செயல்பாட்டிற்கு நிதி உதவி அளிப்பதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு $500,000 வரையிலான அபராதமும், ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
