ஈசூனில் மாண்டுகிடந்த 23 வயது இளையர்

ஈசூனில் மாண்டுகிடந்த 23 வயது இளையர்

1 mins read
வீவக அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் அவரது உடல் காணப்பட்டது
a9fabfd9-00e8-444c-ade6-40846c9261bd
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28), புளோக் 350 ஈசூன் அவென்யூ 11ன் கீழ்த்தளத்தில் ஆடவர் ஒருவர் அசைவின்றிக் கிடந்ததாகக் கூறப்பட்டது. - படம்: ஏஷியாஒன்

ஈசூனில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) காலை 6 மணியளவில், 23 வயது ஆடவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

புளோக் 350 ஈசூன் அவென்யூ 11ன் கீழ்த்தளத்தில் அவரது உடல் காணப்பட்டதாக ஏஷியாஒன் இணையத்தளம் தெரிவித்தது.

சம்பவ இடத்துக்குச் சென்றபோது காலை 7.40 மணியளவில் காவல்துறையின் கார்கள் நின்றிருந்ததைக் காண முடிந்ததாக ஏஷியாஒன் கூறியது.

அந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் தரைத்தளத்தில் காவல்துறை தடுப்புகளை அமைத்திருந்ததாகவும் அருகிலிருந்த புல்வெளியில் காவல்துறையின் நீல நிறக் கூடாரம் காணப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

மாண்டுகிடந்த ஆடவர் அந்தக் குடியிருப்பில் வசித்தவர் என்று குடியிருப்பாளர்கள் கூறியதாகத் தெரிகிறது.

அந்த ஆடவர் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுவதாகவும் அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அவர் அசைவின்றிக் காணப்பட்டதாகவும் ஏஷியாஒன் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

சம்பவ இடத்திலேயே அவர் மாண்டுவிட்டதாக மருத்துவ உதவியாளர் கூறினார்.

முதற்கட்ட விசாரணை முடிவில், இச்சம்பவம் தொடர்பில் சூது ஏதும் இருப்பதாகச் சந்தேகிக்கவில்லை என்று காவல்துறை கூறியது.

ஆயினும், ஆடவரின் மரணம் இயற்கைக்கு மாறானதாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுகிறது.

இந்த வாரத்தில் ஈசூனில் நிகழ்ந்த இயற்கைக்கு மாறான இரண்டாவது உயிரிழப்புச் சம்பவம் இது. முன்னதாக, திங்கட்கிழமை புளோக் 638 ஈசூன் ஸ்திரீட் 61ன் கீழ்த்தளத்தில் 24 வயது சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர் ஒருவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்