பொதுமக்களின் உதவியால் கண்டறியப்பட்ட 230 அதிக ஆபத்துள்ள குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள்

2 mins read
86f83840-af3e-43e2-ab45-309d9e8c86e3
கடந்த ஆண்டு 2,303 அதிக ஆபத்துள்ள குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகின. அதில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு பொதுமக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 230 அதிக ஆபத்துள்ள குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள் அண்டை வீட்டுக்காரர்கள், குடும்ப உறுப்பினர்கள், பொது இடத்தில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்கள் கொடுத்த புகார்கள்மூலம் அடையாளம் காணப்பட்டன.

தற்போது பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாகத் தகவல்கள் கொடுக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.

கடந்த ஆண்டு 2,303 அதிக ஆபத்துள்ள குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகின. அதில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு பொதுமக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டது.

30 விழுக்காடு சம்பவங்கள் பள்ளிகள், பாலர் பள்ளிகள், பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட கல்வி அமைப்புகளால் அடையாளம் காணப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அதிக ஆபத்துள்ள குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள் 14.5 விழுக்காடு அதிகரித்திருந்தது. அதில் பாதிக்கும் மேற்பட்டவை உடல்ரீதியான துன்புறுத்தல்கள்.

குழந்தைகளுக்கு ஆபத்து அதிகம் இருந்தால் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். அதிக ஆபத்துள்ள குழந்தை துன்புறுத்தல் சம்பவங்களைச் சமுதாயக் குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பாதுகாப்பு சேவை கையாளும்.

துன்புறுத்தலால் பாதிக்கப்படுபவர்கள் உதவி கேட்டு அழைக்கும் சம்பவங்கள் 11,100ஆக அதிகரித்துள்ளது என்று சிஎன்ஏவிடம் சமுதாயக் குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது. 2021ஆம் ஆண்டு அது 8,400ஆக இருந்தது.

புகார் அழைப்புகளில் குழந்தைத் துன்புறுத்தல் தொடர்பானவை 4,500. 2021ஆம் ஆண்டு அது 2,200ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்