சிங்கப்பூரிலிருந்து ஜோகூர்பாருவுக்கு தனியார் வாடகை வாகனங்களில் சென்று திரும்ப கம்ஃபர்ட்டெல்குரோ 24 மணி நேரமும் சேவை வழங்கும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
அதன் விவரங்களை அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) ஓர் அறிக்கையில் வெளியிட்டது.
வரும் திங்கட்கிழமை (நவம்பர் 23) முதல் ஸிக் (Zig) எனப்படும் காம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் அச்சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
முன்பதிவுகள் நான்கு மணி நேரத்துக்கு முன்பாக செய்யப்பட வேண்டும். வாரம் ஏழு நாள்களும் சேவை இயங்கும். சேவைக்கான கட்டணங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, வழியில் அவை மாற்றம் செய்யப்பட மாட்டா.
பயணிகள் இருக்கைகளைப் பகிர்ந்துகொள்ளும் முறையிலும் பயணம் செய்யக்கூடிய அச்சேவையை ஸிக் செயலியின் 6552 1111 என்ற எண்களில் வாடிக்கையாளர் நேரடித் தொலைபேசியிலும் 24 மணி நேரமும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் சிங்கப்பூரில் உள்ள எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றிக்கொள்வார்கள். ஜோகூர் பாருவில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயணிகள் இறங்கவேண்டும். அவற்றில் ஸ்கூடாய், இஸ்கந்தர் புத்ரி, செனாய் ஆகிய இடங்கள் அடங்கும்.
சிங்கப்பூர் திரும்பும் பயணிகள் ஜோகூர்பாருவில் அவர்களை ஏற்றிச் செல்லும் அனுமதிபெற்ற நான்கு இடங்களில் ஒன்றைத் தேர்வு செய்து தனியார் வாகனங்களில் ஏற வேண்டும். அங்கிருந்து அவர்கள் சிங்கப்பூரின் எந்த இடத்துக்கும் வந்திரங்கலாம். அத்திட்டப்படி எதிர்காலத்தில் ஜோகூரில் அதிக இடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸிக் பை காம்ஃபர்ட்டெல்குரோ’ என்ற போக்குவரத்து முன்பதிவுத் தளம் சிங்கப்பூரின் ஆகப் பெரிய டாக்சி நிறுவனத்தையும் வளர்ந்துவரும் பகிர்வுப் பயணச் சேவையையும் ஒருங்கிணைக்கிறது.
மேலும் மலேசியாவின் வாடகைப் பயணச் சேவைத் தளமான ‘குமுத்தே’ என்ற நிறுவனத்துடன் ஓர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் காம்ஃபர்ட்டெல்குரோ அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பங்காளித்துவத்தின்படி, இரு நாடுகளிலும் செயல்படும் தனியார் வாகனங்கள் பயணத்துக்கான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்படும். ஸிக், குமுத்தே ஆகிய இரு நிறுவனங்களும் இதில் இணைவதால், இரு பகுதிகளுக்கும் பயணம் செய்யவிரும்பும் மக்களுக்கு அதிக அளவில் வாகனங்கள் சேவையாற்றும்.
கடல்பால எல்லைகளைக் கடந்து பயணிகளுக்கு இருவழிப் போக்குவரத்துச் சேவை வழங்கும் உரிமத்தை, கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்துக்கும் குமுத்தே நிறுவனத்தின் உரிமையாளரான ‘கும்பூல்’ அமைப்புக்கும் மலேசிய அரசாங்கம் திங்கட்கிழமை வழங்கியது.
செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் காம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் அதனிடம் 150 எல்லை தாண்டிய சேவை வழங்கும் உரிமம் பெற்ற தனியார் வாடகை வாகனங்கள் உள்ளதாகத் தெரிவித்தது.
