மவுண்ட்பேட்டனில் உள்ள ஒரு பாலர் பள்ளியில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல், 24 பாலர்களும் இரண்டு ஊழியர்களும் இரைப்பை குடலழற்சி அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதை அடுத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரைப்பை குடலழற்சி என்பது ஒரு வைரஸ் அல்லது நுண்கிருமியால் வயிற்றிலும் குடலிலும் ஏற்படும் ஒருவித அழற்சியாகும். அடிவயிற்று வலி, வாந்தி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள்.
மவுண்ட்பேட்டன் புளோக் 92ல் உள்ள அந்த பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஊழியர்களில் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று தொற்றுநோய்கள் அமைப்பு, ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு, சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை புதன்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட மாணவர்களும் ஊழியர்களும் தற்போது குணமடைந்து, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) மீண்டும் பள்ளிக்குத் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தனக்குத் தெரியும் என பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் கூறியது.
“சிறுவர்களின் உடல்நலமும் பாதுகாப்பும் எங்களின் தலையாய முன்னுரிமையாக உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் எச்சரிக்கையுடன் விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று அப்பள்ளியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தான் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் சிறுவர்களின் நலனை உறுதிசெய்ய பாலர்பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அமைப்பு சொன்னது.

