ஜாலான் புசாரில் கிறிஸ்துமசுக்கு முன்தினம் 25 வயது ஆடவரைக் கத்தியால் குத்தியதாகக் கைது செய்யப்பட்ட 24 வயது ஆடவர் மீது வியாழக்கிழமை (டிசம்பர் 26) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
திரு முகம்மது நூர் ஷலிஃபி சலிமியின் இடது பெருவிரலைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் முகம்மது ஃபாரிஸ் முகம்மது ஃபட்ஸிர் மீது வேண்டுமென்றே கடும் காயம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை 3.40 மணியளவில் அந்த ஆடவர் கத்தியால் குத்தியதாகக் காவல்துறை தெரிவித்தது.
காயமடைந்த திரு நூர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கத்தியால் குத்திய ஃபாரிஸ் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்.
முதற்கட்ட விசாரணையில், இரு ஆடவர்களும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்றும் அவர்களுக்கிடையே பிரச்சினை இருந்தது என்றும் தெரியவந்தது.
காவல்துறை அதிகாரிகள் ஃபாரிஸை அடையாளம் கண்டு அதே நாள் கியட் ஹாங் குளோசில் உள்ள வீடு ஒன்றில் அவரைக் கைது செய்தனர். அவருக்கு அடைக்கலம் தந்ததாகக் கூறப்படும் 19 வயதுப் பெண்ணும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையோ 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம். அத்துடன் அபராதமோ பிரம்படியோ விதிக்கப்படலாம்.
சட்டபூர்வ காரணம் இல்லாமல் பொது இடங்களில் ஆயுதங்களை வைத்திருப்பது குற்றம் எனப் பொதுமக்களுக்குக் காவல்துறை நினைவுறுத்தியது. மீறுவோர்க்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் குறைந்தது ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

