சிங்கப்பூரில் $11.3 மில்லியன் இழப்பு ஏற்படக் காரணமான பல்வேறு மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் 240 பேரைக் காவல்துறை விசாரிக்கிறது.
அவர்களில் 156 பேர் ஆண்கள். 84 பேர் பெண்கள். சந்தேகத்துக்குரிய அனைவரும் 16 வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஜனவரி 24ஆம் தேதிக்கும் பிப்ரவரி 6ஆம் தேதிக்கும் இடையே காவல்துறை மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.
அவர்களுக்கு 900க்கு மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஆள்மாறாட்டம், முதலீடு, வேலைவாய்ப்பு, மின்வர்த்தகம் தொடர்பான மோசடிச் சம்பவங்களும் அவற்றில் அடங்கும்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், உரிமமின்றிக் கட்டணச் சேவை வழங்குதல் உள்ளிட்ட மோசடிகள் தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகக் காவல்துறை பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருப்பதைத் தவிர்க்கும்படிப் பொதுமக்களுக்கு அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடியில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $500,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
உரிமமின்றிக் கட்டணச் சேவை வழங்கிய குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $125,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

