உரிய வேலை அனுமதிச்சீட்டு இல்லாமல் வெளிநாட்டினர் 11 பேரை வேலைக்கு அமர்த்திய நிறுவன இயக்குநருக்கு $24,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
‘சேட்ஸ் இன்ஃபிளைட் கேட்டரிங் மையம் 2’ல் (SICC 2) கடந்த 2022ஆம் ஆண்டில் மூன்று மாதங்கள்வரை அந்த வெளிநாட்டவர்கள் வேலைசெய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, ‘டிபிஆர்ஓ லாஜிஸ்டிக்ஸ்’ என்ற கிடங்கு, துப்புரவுச் சேவைகள் நிறுவனத்தின் இயக்குநர் ஃபஸ்லி ஹிஷாம் முகம்மது ஃபைருஸ் ஷா, 35, வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு அமர்த்துதல் சட்டத்தின்கீழ் தம்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்படுமுன் அவர்மீதான அத்தகைய மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.
வேலை அனுமதிச்சீட்டு இல்லாமல் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் காப்புறுதி போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பெற முடியாது என்று மனிதவள அமைச்சின் வழக்கறிஞர் கோ சுவான் யிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அத்தகைய ஊழியர்கள் துன்புறுத்தப்படுவதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.
மோரே சாய் கிரண் என்ற தமது இந்தியக் கூட்டாளி மூலம் வெளிநாட்டு மாணவர்களைத் தமது நிறுவனத்திற்கு வேலைக்கு எடுக்க முடியும் என்பதை ஃபஸ்லி அறிந்தார். அதன்படி சாய் கிரணை அவர் தொடர்புகொள்ள, சாய் கிரண் வெளிநாட்டவர்களை அவரிடம் சேர்த்துவிட்டார்.
அந்த வெளிநாட்டு ஊழியர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் என வாரத்திற்கு மூன்று முதல் ஏழு நாள்கள்வரை வேலை செய்ததாகவும் நாளொன்றுக்கு $90 முதல் $100 வரை ஊதியம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மனிதவளக் குற்றங்கள் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மனிதவள அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் 2022 ஏப்ரல் 5ஆம் தேதி எஸ்ஐசிசி 2ல் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
வணிக, நிதி சார்ந்த லாபத்திற்காகச் சட்டத்தை மீறியதால் ஃபஸ்லிக்கு $26,000 அபராதம் விதிக்க வேண்டும் என்று திரு கோ கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, ‘டிபிஆர்ஓ லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தைக் கலைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக ஆவணங்கள் காட்டின.
வேலை அனுமதிச்சீட்டின்றி வெளிநாட்டவர் ஒருவரைப் பணியில் அமர்த்துவோருக்கு $5,000 முதல் $30,000 வரை அபராதம், ஓராண்டு வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

