2025ல் சிங்கப்பூரில் 24,700 திருமணங்கள் பதிவு

கடந்த ஐந்தாண்டுகளில் ஆகக் குறைவு

2025ல் சிங்கப்பூரில் 24,700 திருமணங்கள் பதிவு

2 mins read
e98eb4f4-1c70-499c-892b-1158ef6a8d3e
முந்திய 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 6.2 விழுக்காடு குறைவாகத் திருமணங்கள் பதிவாயின. - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2

சிங்கப்பூரில் சென்ற 2025ஆம் ஆண்டில் 24,687 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது, முந்திய 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 6.2 விழுக்காடு குறைவு. கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்தும் இதுவே ஆகக் குறைவு. 2024ல் 26,328 இணையர் திருமண உறவில் இணைந்தனர்.

புள்ளிவிவரத் துறையின் இணையத்தளம் இந்த விவரங்களைத் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகத் திருமணங்கள் குறைந்துள்ளன. கொவிட்-19 தொற்றுக்குப்பின் ஆக அதிகமாக கடந்த 2022ஆம் ஆண்டில் 29,389 திருமணங்கள் பதிவாயின.

இந்நிலையில், இந்த 6.2 விழுக்காடு சரிவு குறிப்பிடத்தக்கது என்று திருமணம், குழந்தைப்பேறு குறித்து ஆய்வுசெய்யும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

திருமணங்கள் தொடர்ந்து குறைவது சிங்கப்பூரின் மொத்தக் கருவள விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவர்களின் கருத்து.

கடந்த 2023, 2024ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் மொத்தக் கருவள விகிதம் 0.97ஆக இருந்தது. 2025க்கான இந்த விகிதம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த ஜனவரியில் கொள்கை ஆய்வுக் கழக மாநாட்டில் பங்கேற்றபோது, மொத்தக் கருவள விகிதம் குறித்து நம்பிக்கை அளிக்கும் தகவலை எதிர்பார்ப்பதற்கில்லை என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்திருந்தார்.

2020ல் கொவிட்-19 தொற்று பரவியபோது பலரும் தங்களது திருமணத் திட்டங்களைத் தள்ளிவைத்தனர். அதனால், 2021, 2022ஆம் ஆண்டுகளில் திருமணங்கள் கூடின.

இதனிடையே, 2025ல் திருமணங்கள் சரிந்ததற்குத் திருமணப் பருவத்தில் இருப்போரின் எண்ணிக்கை, குறிப்பாக 20 முதல் 30களின் தொடக்கத்தில் இருப்போரின் எண்ணிக்கை குறைந்திருப்பதும் ஒரு காரணம் என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் குழந்தைநலத் துறைப் பேராசிரியர் ஜேன் இயூங் கூறினார்.

செயற்கை நுண்ணறிவாலும் (ஏஐ) பிற தொழில்நுட்பங்களாலும் பொருளியலில் ஏற்படும் பெருமாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில், கல்வியிலும் வாழ்க்கைத்தொழிலிலும் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பது சிங்கப்பூரர்கள் தங்கள் திருமணத்தைத் தள்ளிப்போடுவதற்கு ஒரு காரணம் என்றார் கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் டான் போ லின்.

இதன் காரணமாக, கடந்த இருபதாண்டுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான முதலாவது திருமணத்தின் இடைநிலை வயது உயர்ந்துள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டில் ஆண்களின் திருமண இடைநிலை வயது 29.4 ஆண்டுகளாக இருந்த நிலையில், 2024ல் அது 31.1ஆக உயர்ந்தது.

அதுபோல, பெண்களின் திருமண இடைநிலை வயது 2004ல் 26.7 ஆண்டுகளாக இருந்த நிலையில், 2024ல் அது 29.6ஆகக் கூடியது.

குறிப்புச் சொற்கள்