கில்மன் பேரெக்ஸ் குடியிருப்புப் பேட்டையில் மரபுடைமைக்காகப் பாதுகாக்கப்படும் 25 கட்டடங்கள்

கில்மன் பேரெக்ஸ் குடியிருப்புப் பேட்டையில் மரபுடைமைக்காகப் பாதுகாக்கப்படும் 25 கட்டடங்கள்

2 mins read
cc9e3808-69bd-4254-be8c-bd1e7d9dc403
பிரெஸ்டன் சாலையில் அமைந்துள்ள 1939ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அலெக்சாண்ட்ரா பள்ளியின் வளாகக் கட்டடம். - படம்: ஸ்டூடியோ லாப்பீஸ்

கில்மன் பேரெக்ஸ் பகுதியில் 1939ஆம் ஆண்டு அலெக்சாண்ட்ரா பள்ளி திறக்கப்பட்டது.

அப்பகுதியின் மிக உயர்ந்த குன்றின்மீது கடலையும் தீவையும் நோக்கியவாறு அப்பள்ளி அமைந்திருந்ததால், அதன் எழில்மிகு காட்சிக்காகப் பேசப்பட்டது.

தற்போது, ஐஎஸ்எஸ் அனைத்துலகப் பள்ளி அக்கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அலெக்சாண்ட்ரா பள்ளி வளாகம், அப்பகுதியில் அமையவிருக்கும் புதிய குடியிருப்புப் பேட்டையில் மரபுடைமைக்காகப் பாதுகாக்கப்படவுள்ள 25 கட்டடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்துடனான முக்கிய வரலாற்றுப் பாலமாக அக்கட்டடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ராணுவத் தளத்தைக் குடியிருப்புப் பேட்டையாக மறுமேம்பாடு செய்வதற்கு முன்பாக, அங்குள்ள 86 இடங்களில் மரபுடைமை, சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் இக்கட்டடங்களும் அடங்கும்.

அந்த ஆய்வில் அவற்றின் சிறப்பம்சங்களும் உள்கட்டமைப்பும் மதிப்பிடப்பட்டன.

பொது, தனியார் குடியிருப்புகளுடன் அமைக்கப்படவுள்ள இந்த 40 ஹெக்டர் குடியிருப்புப் பேட்டையில், ஐந்தில் ஒரு பகுதி பசுமை வட்டாரத்திற்காக ஒதுக்கப்படும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதில் தற்போதைய இயற்கைச் சூழலும், புதிதாக நடப்படும் தாவரங்களும் அடங்கும்.

அவ்வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வெளியிட்டது. அவற்றிலிருந்து மேற்குறிப்பிட்ட தகவல்கள் அறியப்பட்டன.

தற்போது, அவ்வட்டாரத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்கபூர்வ வாழ்க்கைமுறை சார்ந்த வர்த்தகங்கள், கலைக்கூடங்கள், உணவகங்கள் ஆகியவை இயங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்பாளர்களுக்கு சதர்ன் ரிட்ஜஸ் எனப்படும் சிங்கப்பூரின் தெற்கு மலைச் சிகர பூங்காக்களை இணைக்கும் 10 கி.மீ. பாதை, லெப்ரடார் இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதி ஆகியவற்றின் மூலம் குடியிருப்புப் பேட்டைக்கு அருகிலேயே அனுகூலமான பசுமைச் சூழலை வழங்கும் வகையில், பிற அமைப்புகளுடன் இணைந்து விரிவான பணித்திட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளதாக வீவக தெரிவித்தது.

2024ஆம் ஆண்டு கில்மன் பேரெக்ஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அப்போது, அங்குள்ள தற்போதைய குத்தகைதாரர்களின் குத்தகைக் காலம் 2030க்குள் படிப்படியாக முடிவடையும் எனக் கூறப்பட்டது.

அங்கு எத்தனை வீடுகள் கட்டப்படும் என்று வீவக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

எனினும், அப்பகுதிக்கு அருகில் 48 ஹெக்டர் பரப்பளவில் 10,000 வீடுகளுடனும் 10 ஹெக்டர் பசுமைப் பகுதியுடனும் அமையவிருக்கும் பெர்லாயர் பேட்டை, கில்மன் பேரெக்சின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை உணர்த்துகிறது.

குறிப்புச் சொற்கள்