பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 250 சரக்கு வாகனங்கள் நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளிடம் பிடிபட்டன.
மூன்று நாள்களாக நடத்தப்பட்ட இருவேறு அமலாக்க நடவடிக்கைகளின்போது அந்த வாகனங்கள் சிக்கின.
அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகச் சுமையை ஏற்றியது, அனுமதி இன்றி விரைவு சாலைகளில் சென்றது, முறையான மழை நீர் மறைப்புகளை அமைக்கத் தவறியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அந்த வாகனங்களைப் பிடித்து வைத்துள்ளதாக ஆணையம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்ட தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
“அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றிச் சென்றதற்காக மட்டும் 30 வாகனங்கள் பிடிபட்டன. அவற்றில் உள்ள சரக்குகள் சாலையில் விழுந்தாலோ சிந்தினாலோ சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்கு ஆபத்து நேரிடும்.
“அத்துடன், அத்தகைய வாகனங்களைப் பாதுகாப்பாகக் கையாள்வதிலும் இடையூறு ஏற்படும்,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இவை தவிர, அதிகமானோரை ஏற்றிச் சென்றது, முறையான அனுமதி இன்றி விரைவுச் சாலைகளில் சென்றது போன்ற குற்றங்களுக்காக 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் பிடிபட்டன. சிமெண்ட் கலவை இயந்திரம் பொருத்தப்பட்டவை உள்ளிட்ட வாகனங்கள் அனுமதியின்றி விரைவுச் சாலைகளில் சென்றதும் அவற்றுள் அடங்கும்.
இத்தகைய குற்றத்திற்கு $1,000 வரை அபராதம், மூன்று மாதம் வரை சிறை ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம்.
அடுத்ததாக, முன்வரிசைப் பயணி இருக்கையில் யாரும் அமராமல் இருந்தது, முறையான மழைநீர் மறைப்பை அமைக்கத் தவறியது, அதிகபட்சப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வில்லை இல்லாதது போன்ற குற்றங்களுக்காக 160க்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிகாரிகளிடம் சிக்கின.
இதுபோன்ற குற்றங்களுக்கு $5,000 வரை அபராதம், அதிகபட்சம் மூன்று மாதச் சிறை ஆகியன விதிக்கப்படலாம்.
