சிங்கப்பூரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் உரிமம் பெற்ற நிறுவனத்திடமிருந்து $250,000 வாங்கிய ஒருவரின் கடன் $21 மில்லியனுக்கு அதிகரித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அளவுக்கு அதிகமான வட்டியாலும் தாமதமாக வட்டி கட்டியதற்கு விதிக்கப்பட்ட கட்டணங்களாலும் கடன் வாங்கிய நபர் வீட்டையும் இழக்க நேர்ந்துள்ளது.
கடனைக் கட்ட திணறிய ஆடவர் ஒரு கட்டத்தில் அவரது $2 மில்லியன் மதிப்புள்ள வீட்டைக் கடன் கொடுத்த நிறுவனத்தின் இயக்குநரிடம் விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஐந்து பேர் கொண்ட குடும்பம் தங்குவதற்கு இடமில்லாததால் கடன் கொடுத்த நிறுவனம் கடன் வாங்கிய நபரிடம் வீட்டு வாடகைக்கான ஒப்பந்தத்தைச் செய்தது.
ஒவ்வொரு மாதமும் ஆடவர் $7,000லிருந்து $8,500 வரையிலான வாடகையில் நிறுவனத்திடம் விற்ற வீட்டில் தங்கிக்கொள்ள ஒப்பந்தம் அனுமதித்தது.
ஆனால், கடன் வாங்கிய நபரால் வாடகையைச் செலுத்த முடியாமல் போனதுடன் வீட்டைவிட்டு அவர் வெளியேறவும் மறுத்ததை அடுத்து சம்பவம் வழக்காக நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
வழக்கு குறித்து கடன் வாங்கியவர் செய்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்ற நீதிபதி ஃபிலிப் ஜெயரத்னம், சம்பவம் குறித்து கூடுதலாக விசாரணைகள் நடத்தும்படி தெரிவித்தார்.
அதையடுத்து ஒட்டுமொத்த வழக்கையும் மீண்டும் தொடக்கத்திலிருந்து விசாரிக்கும்படி உத்தரவிட்ட அவர், பாதிக்கப்பட்ட ஆடவருக்கு வழங்கப்பட்ட கடன் தொகையிலும் நிர்ணயிக்கப்பட்ட வாடகையிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
“$250,000 கடன் வாங்கிய நபரின் கடன் தொகை வட்டியாலும் தாமதக் கட்டணத்தாலும் பல மில்லியன் வெள்ளி வரை அதிகரித்தது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது,” என்றார் நீதிபதி.
தம்மிடம் வசூலிக்கப்பட்ட வட்டித் தொகையில் முறைகேடு நடந்திருப்பதால் அனைத்து பரிவர்த்தனைகளையும் ரத்துசெய்ய உத்தரவிடும்படி கடன் வாங்கியவர் கூறினார்.
உதாரணமாக, கடன் வாங்கியவரின் மாத வட்டி 4 விழுக்காடு என்று கூறப்பட்டது.
பெரும்பாலான கடன் வழங்கும் நிறுவனங்களின் மாத வட்டியைவிட அது இரண்டு மடங்கு அதிகம் என்று கடன் வாங்கிய நபர் குறிப்பிட்டார்.
தாமதமாகப் பணம் செலுத்தியதற்காக ஒவ்வொரு மாதமும் 8 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அதோடு தாமதமாகக் கட்டணம் செலுத்தியதற்கான நிர்வாகத் தொகையாக $2,500 வசூலிக்கப்பட்டது.
அதன் விளைவாக 2010ஆம் ஆண்டு $250,000 ஆக இருந்த கடன் தொகை 2021ஆம் ஆண்டு $21 மில்லியனானது.
நீதிமன்றத்துக்கு முழு விவரங்கள் இல்லாததால் மறு விசாரணை நடத்த வேண்டாம் என்று கடன் கொடுத்த நிறுவனம் தெரிவித்தது.

