கம்போடியாவில் செயல்படும் மோசடிக் கும்பலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 27 சிங்கப்பூரர்கள், ஏழு மலேசியர்கள் ஆகியோருக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய 34 பேரும் தற்போது சிங்கப்பூருக்கு வெளியே இருப்பதாக சிங்கப்பூர் காவல்துறை புதன்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மோசடிக் கும்பலுடன் தொடர்புள்ளவர்கள் என்று செப்டம்பர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருடன் அந்தச் சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூர் மக்களைக் குறிவைத்து அரசாங்க அதிகாரிகள்போல ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட குற்றக் கும்பலுக்கு எதிராக செப்டம்பர் 9ஆம் தேதி கம்போடியக் காவல்துறையுடன் இணைந்து சிங்கப்பூர் காவல்துறை அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
கம்போடியாவில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, சந்தேகத்துக்குரிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 12 சிங்கப்பூரர்கள், இரு மலேசியர்கள், ஒரு பிலிப்பீன்ஸ் நாட்டவர் ஆகியோர் அடங்குவர்.
அவர்கள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு, உள்நாட்டு தொடர்புடைய குற்றவியல் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததற்காக செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் குற்றம் சாட்டப்பட்டனர்.
மேல் விசாரணைக்குப் பிறகு, மேலும் 27 சிங்கப்பூரர்களையும் ஏழு மலேசியர்களையும் திட்டமிட்ட குற்றச் செயல்களைப் புரியும் குழுவின் உறுப்பினர்களாகக் காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.
சந்தேகநபர்களுக்கு எதிராக சிவப்பு அறிக்கைகளை வெளியிடுவதற்கும் அனைத்துலகக் காவல்துறையுடன் (இன்டர்போல்) சிங்கப்பூர் காவல்துறை செயல்பட்டு வருகிறது.

