அடுத்த மூவாண்டுகளில் அதிகமான வல்லுநர்களையும் அடுத்த தலைமுறை மீத்திறக் கணினிகளையும் (supercomputers) உருவாக்கும் நோக்குடன் சிங்கப்பூரின் தேசிய மீத்திறக் கணினி நிலையத்திற்கு தேசிய ஆய்வு அறநிறுவனம் $270 மில்லியனை ஒதுக்கவுள்ளது.
மீத்திறக் கணினிகளுக்காக தேசிய ஆய்வு அறநிறுவனம் மானியம் வழங்கவிருப்பது இது இரண்டாவது முறை.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய மீத்திறக் கணினி நிலையத் திட்டங்களுக்காக $200 மில்லியன் முதலீடு செய்யப்பட்டது.
மீத்திறக் கணினியியல் துறையில் ஆய்வுகளை முன்னெடுக்கும் நோக்குடன் அந்நிலையம் கடந்த 2015ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
வழக்கமான கணினிகள் நாள்கணக்கில் எடுத்துக்கொள்ளும் சிக்கலான கணக்கீடுகளை மீத்திறக் கணினிகள் சில மணி நேரங்களில் செய்து முடித்துவிடும்.
சிங்கப்பூரில் மீத்திறக் கணினிகளை இயக்குவதற்கான திறன்களைக் கொண்ட வல்லுநர்கள் போதிய அளவில் இல்லை என்று தேசிய மீத்திறக் கணினி நிலையத்தின் டெரன்ஸ் ஹங் கூறினார்.
நிலையத்தின் புதிய மீத்திறக் கணினிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 26) இடம்பெற்றது.
இதனையடுத்து, கல்வி நிலையங்கள், பயிலரங்குகள், திட்டங்கள் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மீத்திறக் கணினித் திறனாளர்களை உருவாக்க அந்நிலையம் இலக்கு கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணைப் பிரதமரும் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவருமான ஹெங் சுவீ கியட், மீத்திறக் கணினிகளின் மூலம் பலன்களை அறுவடை செய்வதற்கு அத்துறையில் திறனாளர்களை வளர்ப்பது அவசியம் என்றார்.
நிலையத்தின் அஸ்பைர் 2A+, 2A என்ற, பெரிய அறையளவில் இருக்கும் புதிய மீத்திறக் கணினிகளை திரு ஹெங் அறிமுகப்படுத்தினார். அவை, வழக்கமான மடிக்கணினியைப்போல 200,000 மடங்கு திறனுடன் செயல்பட வல்லவை என்பது குறிப்பிடத்தக்கது.

