தெம்பனிஸ், பிடாடாரி, பொங்கோலில் புதிய குப்பைக் குழாய் முகப்புக் கதவுகள்

தெம்பனிஸ், பிடாடாரி, பொங்கோலில் புதிய குப்பைக் குழாய் முகப்புக் கதவுகள்

2 mins read
42827ad8-47c4-4d2c-b32c-7858f8cfd752
சில வீவக குடியிருப்புப் பேட்டைகளில் குடியிருப்புக் கட்டங்களில் உள்ள பழைய குப்பைக் குழாய் முகப்புக் கதவுகள் மாற்றப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிஸ், பிடாடாரி, பொங்கோல் உள்ளிட்ட வட்டாரங்களில் 28 வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் திட்டங்கள் மூலம் குடியிருப்புக் கட்டங்களில் புதிய குப்பைக் குழாய் முகப்பு கதவுகள் பொருத்தப்பட உள்ளன. பழைய வகை கதவுகளைப் பயன்படுத்தும் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) குடியிருப்புக் கட்டடங்ளில் புதிய வகை குப்பைக் குழாய் முகப்புகள் பொருத்தப்படும்.

குடியிருப்பாளர்கள் மிகப் பெரிய பொருள்களை அந்தக் குப்பைக் குழாய்களில் வீசுவதைத் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பெரிய அட்டைப் பெட்டிகள், திரைச்சீலைக் கம்பங்கள், வீடமைப்புப் புதுப்பிப்புப் பணிகள் தொடர்பான சிதைவுகள் ஆகிய பெரிய பொருள்களைக் கண்டபடி வீவக குடியிருப்புக் கட்டங்களில் உள்ள குப்பைக் குழாய்களுக்குள் போடுவதால், அவற்றில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையைத் தவிர்க்க கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய புதிய கதவுகளை விநியோகம் செய்து பொருத்துவதற்கான ஏலக் குத்தகையை வீவக கோரியுள்ளது.

புதிய குப்பைக் குழாய் முகப்புகளின் கதவுகள் காற்று உள்ளே போக முடியாதபடி இருக்க வேண்டும். சுயமாக, சத்தமின்றி மெதுவாக மூடக்கூடியவையாக இருக்க வேண்டும்.

புதிய குப்பைக் குழாய் முகப்புகளுக்குள் பைகளில் போடப்படும் குப்பைகள், வீசப்படும் உணவுகள் போன்ற வழக்கமான வீட்டுக் குப்பைகளை மட்டுமே வீசலாம்.

வெஸ்ட் பிளேன்ஸ் புக்கிட் பாத்தோக், வேலி ஸ்பிரிங் ஈசூன், உட்லீ ஹில்சைட் பிடாடாரி ஆகிய வீவக குடியிருப்புகளில் இவ்வகை புதிய முகப்புக் கதவுகள் பொருத்தப்படும்.

இதற்கான பணிகள் இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதற்கட்ட பணிகள் 12 மாதங்களுக்குள் நிறைவுபெற வேண்டும்.

எஞ்சியுள்ள திட்டங்களுக்கான இரண்டாவது கட்ட பணிகள் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவுபெற வேண்டும்.

குறிப்புச் சொற்கள்
குப்பைவீவகமறுசீரமைப்பு