உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் செப்டம்பர் 12, 13ஆம் தேதிகளில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 280 கிலோகிராம் காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்றங்காய், பாகற்காய், வெண்டைக்காய், உரித்த பூண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்ட காய்கறிகளில் அடங்கும்.
இரண்டு இறக்குமதி நிறுவனங்கள் அந்தக் காய்கறிகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கவில்லை அல்லது அளவைக் குறைத்துத் தெரிவித்தன என்று சிங்கப்பூர் உணவு அமைப்பும், குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையமும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
சில்லறை விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நேரடியாகக் காய்கறி விநியோகிக்கும் லாரிகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அவை பிடிபட்டன.
இரண்டு லாரிகளில் காணப்பட்ட அந்தக் காய்கறிகள் குறித்து முரணான தகவல்கள் தரப்பட்டதை அமைப்பையும் ஆணையத்தையும் சேர்ந்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.
அறிமுகமற்ற நிறுவனங்களிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருள்களும் உணவுப் பொருள்களும் உணவுப் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடும்.
அதனால் தகவல் தெரிவிக்காத அல்லது அளவைக் குறைத்துத் தெரிவிக்கப்பட்ட வேளாண் பொருள்கள் அனைத்தும் சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்படும்.
தொடர்புடைய செய்திகள்
உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் மட்டுமே இங்கு உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யலாம்.
அவை குறித்து முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதும் பொருள்களுடன் உரிய இறக்குமதி அனுமதிப் படிவம் இருப்பதும் அவசியம்.
புதிய காய்கறி, பழங்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது நிரூபிக்கப்பட்டால் $10,000 வரையிலான அபராதமோ மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
பதப்படுத்தப்பட்ட காய்கறி, பழங்களைச் சட்டவிரோதமாகக் கொண்டுவருவோருக்கு முதல்முறை $1,000 வெள்ளியும் அடுத்தடுத்த முறைகளில் $2,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.