மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக 288 பேரிடம் விசாரணை

2 mins read
aaeed4d2-6d6b-46be-96a1-050492d4774d
விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் சந்தேகப் பேர்வழிகள் 1,208க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று காவல்துறை கூறியுள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆயிரக்கணக்கான மோசடிகளில் ஈடுபட்டு, பலருக்கு இழப்பை ஏற்படுத்திய மோசடிச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 288 பேரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த மோசடிச் சம்பவங்களில் சிக்கி பாதிக்கப்பட்டோர் $6.54 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடிப் பேர்வழிகளிடம் பறிகொடுத்துள்ளனர்.

வர்த்தக விவகாரப் பிரிவின் அதிகாரிகளும் சிங்கப்பூர் காவல்துறையினரும் இணைந்து இது தொடர்பாக நவம்பர் 16ஆம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், மோசடிச் சம்பவங்களில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 16 வயது முதல் 76 வயது வரையிலான 288 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

சந்தேகப் பேர்வழிகள் 1,208க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வேலை உத்தரவாத மோசடி, இணைய வர்த்தக மோசடி, முதலீட்டு மோசடி, ஆள்மாறாட்ட மோசடி, இணையக் காதல் மோசடி, பொருள்கள் வாங்குபவர்போல் நடித்து மோசடி செய்தல் உள்ளிட்ட பல மோசடிகளில் சந்தேகப் பேர்வழிகளுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

ஏமாற்று வேலை, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், உரிமமின்றி பணம் அனுப்பும் வர்த்தகம் செய்தல் உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் ஈடுபட்டனரா என்பது குறித்தும் அவர்களிடம் விசாரிக்கப்படுகிறது.

ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவோருக்கு கூடியபட்சம் 10 ஆண்டுச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். அதேபோல் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $500,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் 2024 முதல் காலாண்டில் மட்டும் பலவகையான மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் $386.6 மில்லியன் தொகையைப் பறிகொடுத்துள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதத் தரவுகளின் அடிப்படையில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 16.3 விழுக்காடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்