செங்காங் - பொங்கோல் இலகு ரயில் சேவைக் கட்டமைப்பில் ஏறத்தாழ 28 கிலோமீட்டர் தொலைவிற்குக் கம்பிவடங்கள் சோதிக்கப்படவுள்ளன.
இந்தப் பணியை நிலப்போக்குவரத்து ஆணையமும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் நிறைவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணச் சேவை வழங்கப்படாத நேரத்தில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
செங்காங், பொங்கோங் இலகு ரயில் நிலையங்களுக்கு இடையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி மின்கோளாற்றால் ஏற்பட்ட சேவைத் தடையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையே சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) இரவு ஆணையமும் ‘எஸ்பிஎஸ்’ டிரான்சிட் நிறுவனமும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன.
அதில் செங்காங் பணிமனை விரிவாக்கப் பணிகளின் ஒரு பகுதியாக, 2025ன் நான்காம் காலாண்டிற்குள் ‘எஸ்பி பவர்’ எரிசக்திக் கட்டமைப்பிலிருந்து நேரடியாக மின்விநியோகத்தைப் பெற நிலப்போக்குவரத்து ஆணையம் ஏற்பாடு செய்யும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் வடகிழக்கு சேவைத்தடம், செங்காங் - பொங்கோல் இலகு ரயில் சேவைத் தடம் ஆகியவற்றின் மின்விநியோகத்தை மேம்படுத்தும் இலக்குடன் ஆணையம் ‘எஸ்பிஎஸ்’ டிரான்சிட்’ உடன் இணைந்து செயலாற்றும் என்றும் கூட்டறிக்கை கூறியது.

