சிங்கப்பூர் இலக்கியப் படைப்புகளை மக்கள் எளிதில் அணுகும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக, சிங்கப்பூரர்கள் 235,000க்கும் அதிகமான உள்ளூர் இலக்கிய நூல்களை எஸ்ஜி கலாசாரச் சிறப்புத்தொகை வாயிலாக வாங்கியுள்ளனர்.
விக்டோரியா அரங்கில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) மாலை நடைபெற்ற இவ்வாண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் கல்விக்கான இரண்டாம் அமைச்சருமான திரு டேவிட் நியோ இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு எழுத்தாளர் விழாவில் அவர் அறிவித்தபடி, இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து கலாசாரச் சிறப்புத்தொகையைக் கொண்டு சிங்லிட் புத்தகங்களை வாங்கும் திட்டம் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் இலக்கியப் படைப்புகளுக்கு வலுவான ஆதரவு அளித்துவரும் சிங்கப்பூரர்களுக்குத் திரு நியோ நன்றி தெரிவித்தார்.
சிங்கப்பூர் இலக்கியப் படைப்புகளை மக்கள் எளிதில் அணுகுவதற்கான முதலீடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இளைய தலைமுறையினரிடையே வாசிக்கும் ஆர்வத்தை வளர்க்கப் பெற்றோருடனும் சமூகத்துடனும் அரசாங்கம் கைகோத்துச் செயல்படும் என்றார் அமைச்சர். சிங்கப்பூர் புத்தக மன்றம், ‘சிங் லிட் ஸ்டேஷன்’ போன்ற இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து, பள்ளிகளில் ஆண்டுதோறும் 80க்கும் மேற்பட்ட பயிலரங்குகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்கும் நோக்கில், அவர்களுக்கு ஆக்கபூர்வமான வழிகாட்டல்களும் இந்தியாவின் ‘சங்கம் ஹவுஸ்’ போன்ற உறைவிடப் பயிற்சி வாய்ப்புகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
புத்தகங்களை வாங்கும், வாசிக்கும் பண்பாட்டைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட திரு நியோ, “இங்கு நீங்கள் கண்டறியும் கதைகள், உங்கள் கண்முன்னே மறைந்திருக்கும் நுட்பங்களைக் கூர்ந்து கவனிக்க உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்,” என்றார்.
நவம்பர் 13 முதல் 22ஆம் தேதி வரை பத்து நாள்களுக்கு நடைபெறும் 29வது சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, ‘கண்முன்னிருந்தும் காணப்படாதவை’ என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது. அன்றாட வாழ்வில் நாம் கவனிக்கத் தவறும் தருணங்களையும் கதைகளையும் புதிய கோணத்தில் அணுக இக்கருப்பொருள் அழைப்பு விடுக்கிறது.
ஆர்ட்ஸ் ஹவுஸ் குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவில், 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் படைப்பாளர்களும் 300க்கும் அதிகமான எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் கலந்துகொள்கின்றனர். மொத்தம் 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும் இவ்விழாவின் படைப்பாளர்களில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள்.
கதைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் இதுபோன்ற விழாக்கள் மக்களிடையே ஆழமான பிணைப்பையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன என்றார் விழா இயக்குநர் யோங் ஷு ஹூங்.
விழாவின் கருப்பொருள் குறித்துப் பேசிய அவர், “நம்மைச் சுற்றியுள்ளவற்றையும் நாம் கவனிக்கத் தவறிய கதைகளையும் கூர்ந்து நோக்கும்போது, நமக்குள் இருக்கும் ஆழமான தொடர்புகள் வெளிப்படும்,” என்று கூறினார்.
உணவும் கலந்துரையாடலும் இணைந்த ‘சலூன் தொடர்’, லிட்டில் இந்தியாவின் மறைந்திருக்கும் சுவரோவியங்களை ரசிக்கும் இலக்கிய நடைப்பயணங்கள் போன்ற மக்கள் விரும்பும் நிகழ்ச்சிகள், இலக்கியத்தை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக உணரவைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு விழாவில் ‘குற்றமும் மர்மமும்’ என்ற பிரிவுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அத்துடன், தெரிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு நேரடி மொழிபெயர்ப்பும் செயற்கை நுண்ணறிவு மூலம் மொழிபெயர்க்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
