சிங்கப்பூரின் ஆகப் பெரிய பண மோசடி வழக்கில் தொடர்புடைய இரண்டாவது வங்கி ஊழியருக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த லியு காய், 36, சுவிஸ் தனியார் வங்கியான ஜூலியஸ் பேயரில் மேலாளராகப் பணியாற்றினார். 2020ஆம் ஆண்டு நவம்பரில் லின் பாயிங் எனும் பெண் போலியான வரி ஆவணத்தைச் சமர்ப்பிக்க உடந்தையாக இருந்தது தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை லியு காய் ஒப்புக்கொண்டார்.
சீன நாட்டவரான லின், கம்போடியா, டொமினிக்கா, துருக்கி ஆகிய நாடுகளின் கடப்பிதழ்களை வைத்துள்ளார். 3 பில்லியன் வெள்ளி கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பத்துப் பேரில் லின் மட்டுமே பெண். 2024ஆம் ஆண்டு மே மாதம் அவருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
லியு காயின் உதவியுடன் அவர் சுவிட்சர்லாந்தில் வங்கிக் கணக்கைத் திறந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, சிட்டிபேங்க் வங்கியின் முன்னாள் ஊழியர் வாங் சிமிங்கிற்கு வியாழக்கிழமை ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

