கேலாங் பகுதியில் உள்ள சன்ஃபிளவர் ரீஜன்சி கூட்டுரிமை வீடு ஒன்றில் ஜூலை 29ஆம் தேதி அதிகாலை மூண்ட தீயில் தீயணைப்பு வீரர் ஒருவர் காயமுற்றார்.
தீச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து அதிகாலை 3.30 மணிக்கு காலாங் தீயணைப்பு நிலையம், பாய லேபார் தீயணைப்பு நிலையம், மத்திய தீயணைப்பு நிலையம் ஆகியவற்றிலிருந்து தீயணைப்பு வீரர்கள் லோரோங் 20 கேலாங்கிற்கு விரைந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தபோது ஐந்தாவது மாடி வீடு ஒன்றின் சன்னல் விளிம்பில் ஆபத்தான நிலையில் இருவர் நின்றிருந்தவாறு உதவி கோரிக் கூச்சலிடுவதைப் பார்க்க முடிந்தது.
நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததையும் காண முடிந்தது.
அந்த இருவரையும் மீட்பதற்காக ஒருங்கிணைந்த தள ஏணி ஒன்று உடனடியாகப் பயன்படுத்தப்பட்டது.
வீட்டில் தீயை அணைக்க வீரர்கள் போராடிக்கொண்டிருந்தபோது, படுக்கையறை ஒன்றில் மேலும் ஒருவர் இருந்ததைக் கண்டுபிடித்து அவரைப் பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த மீட்புப் பணியின்போது கூரையின் ஒரு பகுதி தீயணைப்பு வீரர் ஒருவரது கழுத்து, தோள் மீது விழுந்ததில் அவர் காயமடைந்தார்.
சிறு காயம் என்று மருத்துவ அதிகாரி மதிப்பிட்டதை அடுத்து, அந்த வீரர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் மீட்கப்பட்ட இருவரும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
எஞ்சிய ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
வீட்டின் வரவேற்பறை தீக்கு இரையானதாகவும் மற்ற பகுதிகள் புகையாலும் வெப்பத்தாலும் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
நெருப்பு மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய குடிமைத் தற்காப்புப் படை விசாரணை மேற்கொண்டுள்ளது.