நியூசிலாந்தில் நடந்த வேன் விபத்து ஒன்றில் மூன்று சிங்கப்பூர் மாணவர்கள் மாண்டனர்.
அந்த மூன்று மாணவர்களும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள். அவர்களில் இருவருக்கு 21 வயது என்றும் ஒருவருக்கு 24 வயது என்றும் தெரிவிக்கப்பட்டது.
விபத்து ஏப்ரல் 17ஆம் தேதி நியூசிலாந்தின் சவுத் ஐலாந்தில் நடந்தது. விபத்து பின்னிரவு 1 மணிவாக்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவர்கள் வாடகைக்கு ஒரு வேனை எடுத்துக்கொண்டு மாநில விரைவுச்சாலை 79ல் சென்றுகொண்டிருந்த போது சாலை தடுப்புகளில் வேன் மோதி விபத்து ஏற்பட்டது.
அதன் பின்னர் வாகனம் தீப்பற்றிக்கொண்டதாகவும் அதை அணைக்க 11 தீயணைப்பு வீரர்கள் தேவைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களின் மரணத்திற்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் தம்பதி நியூசிலாந்தில் வேனில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர். சம்பவ இடத்திலேயே அவர்கள் மாண்டனர்.

