உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஜூலை 24, 25ஆம் தேதிகளில் அதிகாரிகள் நடத்திய ஒருங்கிணைந்த சோதனைகளில் மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மூன்று டன் எடையுள்ள காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூர் உணவு அமைப்பும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை, சரக்கு வாகனம் ஒன்றில் அறிவிக்கப்படாத காய்கறிகள் இருந்தது கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்டது.
அதில் கத்தரிக்காய், வெள்ளரிக்காய், பயிற்றங்காய் ஆகியவை இருந்தன.
சில்லறை விற்பனைக் கடைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் காய்கறிகளை ஏற்றிவரும் கனரக வாகனங்களில் கூட்டுச் சோதனைகள் நடத்தப்பட்டதாக அமைப்புகள் குறிப்பிட்டன.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் உள்ள அதிகாரிகள் முறைகேடிருப்பதை அறிந்து சரக்கு வாகனத்தில் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் அதை அனுப்பினர்.
சிங்கப்பூர் உணவு அமைப்பின் விசாரணை தொடர்கின்றன.
சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்படும் உணவுப் பொருள்கள் சிங்கப்பூர் உணவு அமைப்பின் தரநிலைகளுக்கு ஏற்ப இருக்கவேண்டும். அவை உரிமம் பெற்றவர்களால் மட்டும் கொண்டுவரப்பட முடியும்.
சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் பொருள்கள் நச்சுணவு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.

