$10 லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு மூன்று வாரச் சிறை

$10 லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு மூன்று வாரச் சிறை

1 mins read
84e3ffa7-8459-4841-aa2d-be7220600941
சீனாவைச் சேர்ந்த குவோ சுவாங்குய், 46. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன நிறுத்தக் காவலருக்குப் பத்து வெள்ளி லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டு ஆடவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குவோ சுவாங்குய், 46, என்ற அந்த ஆடவர் கொடுக்க முன்வந்த அப்பணத்தைப் பெற மறுத்த திரு விக்னேஸ்வரன் குமரன், அதுகுறித்துக் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

சீனாவைச் சேர்ந்த குவோ தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4) அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2023 ஏப்ரல் 4ஆம் தேதியன்று, ஓட்டுநரான குவோ தமது நிறுவன வாகனத்தைக் கட்டுமானத் தளம் ஒன்றின் அருகே இருந்த சாலையில் இரட்டை மஞ்சள் கோட்டருகே நிறுத்துவிட்டுச் சென்றார்.

அப்போது அவ்விடத்திற்கு மோட்டார்சைக்கிளில் வந்த செர்ட்டிஸ் சிஸ்கோ பாதுகாப்புச் சேவைகள் நிறுவன ஊழியரான திரு விக்னேஸ்வரன், நிறுத்தக்கூடாத இடத்தில் குவோ வாகனத்தை நிறுத்தியிருந்ததைக் கண்டார்.

அதனையடுத்து, வாகனத்தை நிறுத்துவது தொடர்பில் இழைக்கப்பட்ட தவற்றுக்காக ஓர் அறிவிப்புச்சீட்டை அச்சிட்டு, அதனை அவ்வாகனத்தில் வைக்க முயன்றார்.

சற்று நேரத்தில் அங்கு வந்த குவோ, தமக்கு அச்ச்சீட்டை வழங்க வேண்டாம் எனத் திரு விக்னேஸ்வரனிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவருக்குப் பத்து வெள்ளி லஞ்சம் தர முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கையூட்டுக் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டால் குற்றவாளிக்கு ஐந்தாண்டுவரை சிறையும் $100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்