தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனுமதி இல்லாமல் இஸ்தானா அருகே பேரணிக்கு ஏற்பாடு; 3 பெண்கள் மீது குற்றச்சாட்டு

2 mins read
4db11628-acf7-49b5-b925-5cc1e20ef3fc
மூன்று பெண்கள் மீதும் தடை செய்யப்பட்ட பகுதியில் பேரணிக்கு ஏற்பாடு செய்ததாகப் பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தகுந்த அனுமதி இல்லாமல் இஸ்தானா அருகே பேரணிக்கு ஏற்பாடு செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்கள் மீது வியாழக்கிழமை (ஜூன் 27) குற்றஞ்சாட்டப்பட்டது.

அண்ணாமலை கோகிலா பார்வதி (35), மோசமாத் சோபிகுன் நாகர் (25), சிட்டி அமீரா முகமது அஸ்ரோரி (29) ஆகிய மூவரும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தரும் விதமாக பேரணி நடத்த ஏற்பாடு செய்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அவர்கள் இணையத்தின் மூலம் பேரணிக்கு ஆள்களைத் திரட்டியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மூன்று பெண்கள் மீதும் தடை செய்யப்பட்ட பகுதியில் பேரணிக்கு ஏற்பாடு செய்ததாகப் பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இஸ்தானா அருகே பேரணி நடவடிக்கையை மேற்கொண்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.

அந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 70 பேர் கலந்துகொண்டதாக காவல்துறை தெரிவித்தது.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு கடைத்தொகுதிக்கு வெளியே அவர்கள் கூடியதாகவும் அதன் பின்னர் அவர்கள் தர்பூசணி பழத்தின் ஓவியங்களைக் கொண்ட குடைகளை ஏந்தியபடி இஸ்தானா அருகே சென்றனர் என்று காவல்துறை கூறியது.

பேரணியில் கலந்துகொண்ட மற்றவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது மூவரும் 5,000 வெள்ளி பிணையில் உள்ளனர்.

பேரணி, ஊர்வலம் ஆகியவற்றுக்கு தகுந்த அனுமதி பெற வேண்டும் என்று காவல்துறை நினைவூட்டியது.

அனுமதி இல்லாமல் பேரணி நடத்தினால் அவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்