மரம், சுவர் மீது மோதிய லாரி; 3 வயதுச் சிறுவன் உள்பட மூவர் மருத்துவமனையில்

மரம், சுவர் மீது மோதிய லாரி; 3 வயதுச் சிறுவன் உள்பட மூவர் மருத்துவமனையில்

1 mins read
3c7a6851-fd97-43b9-aa38-d695260bb838
ஜூன் 1 காலை 11.20 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் கூறினர். - படம்: ஷின் மின் வாசகர்

மத்திய விரைவுச்சாலையில் (சிடிஇ) ஜூன் 1ஆம் தேதி நடந்த விபத்தில் சிக்கிய மூன்று வயதுச் சிறுவன் உள்பட மூவர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிடிஇ வழியே லாரி ஒன்றும் ஒரு காரும் மோதிக்கொண்ட விபத்து குறித்துத் தங்களுக்குக் காலை 11.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

லாரியில் பயணம் செய்த 54 வயது ஆடவர், காரை ஓட்டிய 38 வயது ஓட்டுநர், அவருடன் காரில் இருந்த மூன்று வயதுச் சிறுவன் ஆகியோர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் ஒருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

இந்நிலையில் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, விபத்து நிகழ்ந்த தருணத்தைக் காட்டும் காணொளி, ‘எஸ்ஜி ரோடு விஜிலான்டே’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

விரைவுச்சாலையின் ஆக இடது தடத்தில் சென்ற நீலநிற லாரியின் முன்னால் கார் ஒன்று சென்றதை அடுத்து, லாரியின் ‘பிரேக்’ விளக்குகள் எரியத் தொடங்கின.

லாரி வலதுபக்கமாகத் திரும்ப, வெள்ளை கார் ஒன்றோடு மோதியது. அந்த மோதலில் லாரி இடதுபக்கமாகச் சென்று சில மரங்கள் மீதும் சுவர் மீதும் மோதி நின்றது.

குறிப்புச் சொற்கள்