காப்பீட்டு நிறுவனங்கள் நிபுணத்துவம் பெற $30 மில்லியன் நிதி: எம்ஏஎஸ்

காப்பீட்டு நிறுவனங்கள் நிபுணத்துவம் பெற $30 மில்லியன் நிதி: எம்ஏஎஸ்

படம்: சாவ்பாவ்

02 Nov 2026 - 9:01 pm

2 mins read

சிங்கப்பூர் நாணய ஆணையம், மின் கட்டமைப்பு, தரவு மையங்கள் போன்ற பெரிய அளவிலான திட்டங்களில் முதலீடு செய்வதற்கான நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கு உதவ $30 மில்லியன் நிதியை ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளது.

முதலீட்டு அபாயங்களை ஈடுகட்ட காப்பீட்டு நிறுவனங்கள் ஒதுக்க வேண்டிய மூலதனத் தொகையில் மாற்றங்களைச் செய்யவும் ஆணையம் முன்மொழிந்தது.

அபாயங்கள் குறைவாக இருக்கும் முதலீடுகளுக்கான மூலதனத் தேவைகள் அதில் குறைக்கப்படும்.

சாண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 22வது சிங்கப்பூர் அனைத்துலக மறுசீரமைப்பு காப்பீட்டு மாநாட்டில் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் திங்கட்கிழமை (நவம்பர் 2) அதுகுறித்து அறிவித்தார்.

சிங்கப்பூர் மறுசீரமைப்பு காப்பீட்டாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 85 நாடுகளையும் வட்டாரங்களையும் பிரதிநிதித்து 4,300க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

மறுசீரமைப்பு காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு காப்பீடு வழங்கும் அமைப்புகள்.

வணிக நிறுவனங்கள், சமூகங்களை அபாயங்களிலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் ஆசியாவின் வளர்ச்சிக்கு நிதி வழங்குவதிலும் காப்பீட்டு நிறுவனங்கள் கூடுதல் பங்களிப்பை வழங்க முடியும் என்று சிங்கப்பூர் நாணய ஆணைய துணைத் தலைவருமான திரு சீ கூறினார்.

நிதித்துறை மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்படும் $30 மில்லியன், சிங்கப்பூரில் அத்தகைய முதலீட்டு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உதவும்.

மேலும், அதற்கான சிறப்பு முதலீட்டுக் குழுக்களை அமைப்பது, ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, தொழில்முறை நிபுணர்களின் சேவைகளைப் பெறுவது போன்றவற்றுக்கான செலவுகளைச் சமாளிக்கவும் அது பயன்படும்.

ஆசியான் முழுவதும், சாலைகள், துறைமுகங்கள் முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் வரையிலான திட்டங்களுக்காக ஆண்டுதோறும் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை தேவைப்படுகிறது என்று திரு சீ தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த கால ஆய்வுகளின்படி, காப்பீட்டு நிறுவனங்களின் மொத்தச் சொத்துகளில் அத்தகைய முதலீடுகள் கிட்டத்தட்ட 1 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடுவரை மட்டுமே உள்ளன. அந்த விகிதம் தற்போது அதிகரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்