30 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல்

2 mins read
f49f2206-149b-4349-aa44-ae7bbf29fbe3
ஈசூனில் நடந்த அமலாக்க நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத 30 தனிநபர் நடமாட்டச் சாதனங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

இத்தகைய தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் ஏற்படும் தீச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதுபோன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தீவு முழுவதும் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மூன்று நாள்கள் நீடித்த அமலாக்க நடவடிக்கை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்பு வட்டாரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது. விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வைத்திருப்பதாலும் பயன்படுத்துவதாலும் ஏற்படக்கூடிய அபாயங்களை விளக்கிச் சொல்ல நிலப் போக்குவரத்து ஆணைய அமலாக்க அதிகாரிகள், தனிநபர் நடமாட்டச் சாதனப் பயனர்களின் உதவியை நாடியதாக போக்குவரத்து துணை அமைச்சர் பே யாம் கெங் தெரிவித்தார்.

ஈசூனில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் முடிவில் அவர் பேசினார். விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வைத்திருக்கும், பயன்படுத்தும் அல்லது விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் ஆலோசித்து வருவதாக திரு பே குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை, தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் சம்பந்தப்பட்ட 44 தீச்சம்பவங்கள் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

சென்ற ஆண்டு, 67 தீச்சம்பவங்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் நிகழ்ந்தன. இந்த எண்ணிக்கை, 2023ல் பதிவான 55ஐவிட அதிகமாகும்.

2022ல் இந்த எண்ணிக்கை 42ஆகவும் 2021ல் 63ஆகவும் 2020ல் 68ஆகவும் இருந்தது.

மூன்று நாள் அமலாக்க நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட 30 தனிநபர் நடமாட்டச் சாதனங்களில் பெரும்பாலானவை சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டவை என்று திரு பே தெரிவித்தார். விதிமுறைகள் எந்த அளவுக்கு மீறப்பட்டது என்பதை அறிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவற்றின் உரிமையாளர்களுக்கு சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

இவ்வாண்டு ஜனவரியிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத 700க்கும் அதிகமான தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (நவம்பர் 20) தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்