கேலாங்கில் திடீர் சோதனை; 30 பேரிடம் விசாரணை

கேலாங்கில் திடீர் சோதனை; 30 பேரிடம் விசாரணை

2 mins read
6f10dccc-0c08-441b-8187-e5a3ac2344b5
கேலாங் சாலையில் உள்ள இந்த உடற்பிடிப்பு நிலையத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

கேலாங்கில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், பல்வேறு குற்றங்களுக்காக 18 ஆடவர்களும் 12 மாதர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் 24 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சட்டவிரோத சூதாட்டம், பாலியல் நடவடிக்கைகளுக்கு எதிராக நவம்பர் 27 முதல் டிசம்பர் 9ஆம் தேதிவரை அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.

கேலாங்கில் பிடோக் காவல்துறை பிரிவு நடத்திய அமலாக்க நடவடிக்கைகளுக்கு குற்றவியல் புலனாய்வுத் துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம், மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் ஆதரவளித்தனர்.

கேலாங்கில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் இருமல் மருந்து, பாலியல் சுகத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படும் பொருள்கள் போன்ற பதிவுசெய்யப்படாத சுகாதாரப் பொருள்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் சந்தை மதிப்பு ஏறக்குறைய $15,300.

ஏறத்தாழ 45 கிராம் எடையுடைய ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. அதன் மதிப்பு ஏறக்குறைய $13,800.

சுகாதாரப் பொருள்கள் சட்டத்தின்கீழ், புரியப்பட்ட குற்றங்களுக்காக 53, 59 வயதுடைய ஆடவர்கள் இருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உடற்பிடிப்பு நிலையங்கள், கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்களில் மாதர் சாசனத்தின்கீழ், புரியப்பட்ட குற்றங்களுக்காக ஏழு மாதர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 31 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ், புரியப்பட்ட குற்றங்களுக்காக மேலும் ஐந்து மாதர்கள் பிடிபட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்