ஆட்டோபான் ரென்ட் எ கார் (Autobahn Rent A Car) நிறுவனமும் அது சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் 300 மில்லியன் வெள்ளிக்கு மேல் கடன்பட்டிருக்கின்றன.
கடன்பட்ட தரப்புகளிடமிருந்துப் பாதுகாப்பு கோரி ஆட்டோபான் ரென்ட் எ கார் சட்ட ரீதியாக விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நிராகரித்ததாக இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஆட்டோபான் ரென்ட் எ கார் திட்டமிட்டுள்ளது. வாகன வாடகை, வாகனப் பழுதுபார்ப்பு போன்ற சேவைகளையும் அந்நிறுவனம் வழங்கி வருகிறது.
ஆட்டோபான் ரென்ட் எ கார் மற்றும் அது சம்பந்தப்பட்ட வர்த்தகங்களுக்குக்கீழ் இயங்கும் பெரும்பாலான வாகனங்கள். வாகன வாடகைச் சேவைகளுக்கான (ride-hailing services) கார்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
வாகனப் பகிர்வுச் சேவையான ஷேரியட்டுக்கும் (Shariot) அந்நிறுவனம் உரிமை வகிக்கிறது.
ஆட்டோபான் ரென்ட் எ கார், முக்கிய வங்கிகள், நிதி நிறுவனங்களுக்குக் கடனைத் திருப்பித் தரவேண்டியிருப்பது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிபிஎஸ், யுஒபி, ஓசிபிசி ஆகியவை அந்நிறுவனம் கடன்பட்டுள்ள தரப்புகளில் அடங்கும்.
ஆட்டோபான் ரென்ட் எ கார், டிபிசுக்கு 103 மில்லியன் வெள்ளியும் யுஒபிக்கு 17 மில்லியன் வெள்ளியும் ஓசிபிசிக்கு 12.5 மில்லியன் வெள்ளியும் கடன்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக அது 300 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைக் கடனாகத் திரும்பித் தரவேண்டும்.

