முழுநேரப் பயிற்சிகளை மேற்கொள்ளும் பணியிடைக் கால ஊழியர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் நடப்பில் உள்ளது; இத்திட்டம், பகுதிநேரப் பயிற்சிகளை மேற்கொள்ளும் பணியிடைக்கால ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில முழுநேரப் பயிற்சிகளை மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களுக்கென சென்ற ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம் (SkillsFuture Level-Up Programme) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 40 வயது அல்லது அதையும் தாண்டிய சிங்கப்பூரர்களுக்கு மாதந்தோறும் 3,000 வெள்ளி வரையிலான உதவித் தொகை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட ஒவ்வோர் ஊழியரும் அதிகபட்சம் 72,000 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவார்.
இத்திட்டம் இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
இப்போது விரிவுபடுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ் பகுதிநேரப் பயிற்சிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கும் மாதந்தோறும் 300 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் இது நடப்புக்கு வரும்.
வேலை செய்துகொண்டே பகுதிநேரப் பயிற்சிகளை மேற்கொண்டு திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் பணியிடைக்கால ஊழியர்கள் செலவைச் சமாளிக்க இந்த மாற்றம் உதவும் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
முழுநேரம், பகுதிநேரம் என இருவகைப் பயிற்சிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கும் அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேல்விவரங்கள் கல்வி அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் வெளியிடப்படும் என்று திரு வோங் தெரிவித்தார்.
அதேபோல், குறைந்த வருமான ஊழியர்களுக்கான வேலைநலன் திறன் ஆதரவுத் திட்டம் மேம்படுத்தப்படும். மனிதவள அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் மேல்விவரங்கள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

