இஸ்தானாவுக்கு வெளியில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக ஊர்வலம் மேற்கொண்ட பெண்கள் மூவருக்குத் தலா $3,000 அபராதத்தை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.
அந்தப் பெண்கள் மூவரும் நிரபராதி என்று அரசு நீதிமன்றம் இதற்குமுன் விதித்த தீர்ப்பையும் உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
2024, பிப்ரவரி 2ஆம் தேதி. இஸ்தானாவுக்கு வெளியே தடைசெய்யப்பட்ட பகுதியில் 26 வயது மொசமாட் சோபிக்குன் நஹார், 30 வயது சித்தி அமிரா முகமது அஸ்ரோரி, 37 வயது அண்ணாமலை கோகிலா பார்வதி ஆகிய மூவரும் உரிய அனுமதியின்றி ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்த குற்றத்தை எதிர்கொண்டனர்.
பொது இட ஒழுங்குச் சட்டத்தின்படி அவர்கள் மூவரும் குற்றவாளிகள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சீ கீ ஊன் தீர்ப்பளித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பெண்கள் மூவரும் எதிர்த்தனர். நீதிமன்றத்தில் குற்றம் தொடர்பான காணொளி சமர்பிக்கப்பட்டது.
அதில், பிளாஸா சிங்கப்பூரா கடைத்தொகுதிக்கு வெளியே கூடிய கிட்டத்தட்ட 70 பேர், இஸ்தானாவை நோக்கி நடந்தனர். அவர்கள், தர்பூசணிப் பழத்தின் படம் கொண்ட குடையை விரித்தபடி ஊர்வலமாகச் சென்றனர். அந்தத் தர்பூசணிப் பழத்தின் நிறங்கள் பாலஸ்தீனக் கொடியைப் பிரதிநிதித்தன.
அது தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் பெண்கள் மூவரும் நிரபராதிகள் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஊர்வலமாகச் சென்றது தடைசெய்யப்பட்ட பகுதி என்பதை அந்தப் பெண்கள் மூவரும் அறிந்திருக்கவில்லை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. பொதுமக்கள் வழக்கமாகச் செல்லும் பாதையில்தான் அவர்கள் ஊர்வலம் சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து, அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள், பெண்கள் மூவரும் நிரபராதிகள் என்று விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
உயர் நீதிமன்றத்தில் வாதாடிய அவர்கள், இஸ்ரேல்- ஹமாஸ் தொடர்பாகச் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என்ற சுற்றறிக்கையைக் காவல்துறை ஏற்கெனவே வெளியிட்டிருந்ததைக் குறிப்பிட்டனர்.
அதுகுறித்து பெண்கள் அறிந்திருந்தனர் என்றும் வழக்கறிஞர்கள் கூறினர்.

