அமெரிக்காவில் காணப்பட்டுள்ள ஆகப் பெரிய மின்னிலக்க நாணயத் திருட்டுச் சம்பவங்களில் ஒன்றின் தொடர்பில் கைதாகி குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிங்கப்பூரர் ஒருவர், ஒருநாளில் இரவுக் கேளிக்கை கூடங்களில் 500,000 டாலருக்கும் (665,300 வெள்ளி) மேலான தொகையைச் செலவிட்டதாக நம்பப்படுகிறது.
அதோடு, அவர் விலையுயர்ந்த பைகளை விளம்பர அழகிகளிடமும் சமூக ஊடகப் பிரபலங்களிடமும் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான மலோன் லாம், 20, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது. அவருடன் 21 வயது அமெரிக்கரான ஷோன்டீல் செரானோவும் கைது செய்யப்பட்டார் என்று அத்துறை கூறியது.
230 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பிலான மின்னிலக்க நாணயத்தைத் திருடி அதை நல்லப்பணமாக்கத் திட்டம் தீட்டியதாக அவ்விருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக நீதித்துறை தெரிவித்தது. இன்றைய மதிப்பின்படி திருடப்பட்ட 4,100 ‘பிட்காயின்’ நாணயங்களின் மதிப்பு 450 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.
திருட்டு இடம்பெற்றதற்கும் கைது செய்யப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் லாம், செரானோ இருவரும் தவறாக ஈட்டியதாக நம்பப்படும் தொகையை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது. இரவு கேளிக்கைக் கூடங்களில் ஒரு நாளுக்கு லாம், 400,000லிருந்து 500,000 டாலர் வரை செலவு செய்ததாக ‘லாஸ் ஏஞ்சலிஸ் நைட்கிளப்ஸ்’ நிறுவனம் தெரிவித்தது.