வேலை வழங்குவதன் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 32 பேர் கடந்த திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) கைது செய்யப்பட்டனர்.
மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 27) இத்தகவலை வெளியிட்டது. கைதானோரில் ஒருவர், 28 சட்டவிரோதக் கேளிக்கை கூடங்களை நடத்தியதாக நம்பப்படும் 33 வயது ஆடவர். அவர், அந்தக் கேளிக்கை கூடங்களில் மேடைக் கலைஞர்களாகப் பணியாற்ற வேலை அனுமதி அட்டையை வைத்திருப்போரை வேலைக்கு எடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அவரைத் தவிர கைதான மற்றவர்களில் 16 பேர் ஆண்கள், 15 பேர் பெண்கள். சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தங்களின் சேவை தேவைப்படாதபோதும் வேலை அனுமதி விண்ணப்பங்களில் பொய்யான தகவல்களை அவர்கள் பதிவிட்டதாக நம்பப்படுகிறது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
மனிதவள அமைச்சும் காவல்துறையும் தீவெங்கும் 27 இடங்களில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து அந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
மேடைக் கலைஞர்களுக்கான வேலை அனுமதித் திட்டத்தை மறுபரிசீலனை செய்யப்போவதாக மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது. அந்த வேலை அனுமதித் திட்டம், தகுந்த உரிமத்துடன் செயல்படும் கேளிக்கை கூடங்கள் குறுகிய காலத்துக்காக மேடை படைப்பாளர்களை வேலைக்கு எடுப்பதற்கானது.
அத்திட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
தகுந்த வேலை அனுமதி உள்ள வெளிநாட்டு ஊழியர்களை மட்டுமே நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கலாம். நிறுவனங்கள், வேலை அனுமதிக்கு விண்ணப்பம் செய்வோர் என இரு தரப்பும், வேலை அனுமதி பெறும் நடைமுறையின்போது முழுமையான, சரியான, உண்மையான தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலிரயுறுத்தப்படுகிறது.


