$1.1 மில்லியன் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பில் சிக்கிய 33 பேர்

$1.1 மில்லியன் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பில் சிக்கிய 33 பேர்

2 mins read
8c7dbdaa-2ae1-4f18-8bd6-8ca00ea5afda
அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்த மோசடி தொடர்பில் 33 பேரை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரரிடம் $1.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பாதிக்கப்பட்ட ஒருவர் பறிகொடுத்ததை அடுத்து 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 15 வயதிலிருந்து 34 வயதுக்கு உட்பட்டவர்கள்.

வழக்குத் தொடர்பில் 16 வயதிலிருந்து 70 வயதுக்கு இடைப்பட்ட மேலும் ஒன்பது பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. அவர்களில் இருவர் ஏற்கெனவே மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்.

இம்மாதம் 23, 24ஆம் தேதிகளில் தீவெங்கும் நடத்தப்பட்ட மோசடிக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் மூலம் அந்த 33 பேரும் பிடிபட்டனர்.

சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிகள் போல மோசடிக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை இம்மாதம் 22ஆம் தேதி மேற்கொண்டனர்.

அக்டோபர் 14ஆம் தேதி எம்1 தொலைத்தொடர்பு நிறுவன ஊழியரைப் போல ஆள்மாறாட்டம் செய்த நபரிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு அழைப்பு வந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் புலப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே தொலைபேசித் திட்டம் ஒன்றை வைத்திருந்ததாக மோசடிக்காரர் கூறினார். அந்தத் தொலைபேசித் திட்டம் மூலம் தகவல்கள் கசிந்ததாகவும் திட்டத்தை ரத்துசெய்ய உதவுவதாகவும் மோசடிக்காரர் மேலும் சொன்னார்.

அத்துடன் சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரி விசாரணைக்காகப் பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொள்வார் என்றும் மோசடிக்காரர் கூறினார்.

அதைத் தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர் பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொண்டு அவரிடமிருந்து இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை $1.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஏமாற்றிப் பெற்றுக்கொண்டார்.

பல்வேறு வழிகளில் அந்த நிதி மோசடிக்காரருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

$350,000 மதிப்புள்ள தங்கக் கட்டிகளைப் பாதிக்கப்பட்டவர் வாங்கி, முன்பின் தெரியாத பெண்ணிடம் இரண்டு முறை ஒப்படைத்தார்.

மேலும் 60க்கும் அதிகமான யூடிரிப் கியூஆர் குறியீடுகளுக்கு $600,000க்கும் அதிகமான தொகை மாற்றிவிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்