மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 34 வாகனமோட்டிகள் மீது வியாழக்கிழமை (டிசம்பர் 19) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
அவர்களின் வயது 24க்கும் 63க்கும் இடையில் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமையன்று தகவல் வெளியிட்டனர்.
குற்றஞ்சாட்டப்படுபவர்கள் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் கைது செய்யப்பட்டவர்கள்.
காவல்துறை அதிகாரிகள் சுற்றுக்காவல் பணியில் இருக்கும்போது வாகனமோட்டிகளிடம் மது அருந்தினார்களா இல்லையா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. அதில் 34 பேர் அதிகாரிகளிடம் சிக்கினர்.
அதிகாரிகளிடம் பிடிபட்டவர்களில் இருவர் இரண்டு முறை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய நபர்கள் என்று காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.
அந்த இரு நபர்களும் செப்டம்பர் 30ஆம் தேதி மற்றும் நவம்பர் 5ஆம் தேதி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியபோது காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கினர்.
இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதில் 123 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 10 பேர் மாண்டனர். மேலும் 1,260 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டனர்.