தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$341,000 மோசடி: முன்னாள் கார் விற்பனையாளருக்குச் சிறை

2 mins read
79b49302-3b20-4404-a9bd-7ab4fadccd46
சுவே செங் சுவான் அந்தப் பணத்தைச் சூதாட்டம் தொடர்பான செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டார். - கோப்புப் டம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன விற்பனை நிறுவனங்களில் விற்பனை ஆலோசகராக வேலை பார்த்த சுவே செங் சுவான் எனும் ஆடவர் மோசடி தொடர்பான இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, திங்கட்கிழமை (ஜூன் 16) அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் நிறுவனத்தில் வேலை செய்தபோது அந்த ஆடவர் வாடிக்கையாளரை ஏமாற்றி $278,000 தொகையைத் தனது வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடச் செய்ததன் தொடர்பில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் சென்ற ஆண்டுப் பிற்பகுதியில் மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்த்த அவர் மற்றொரு வாடிக்கையாளரிடம் அதேபோல் $62,500 தொகையை மோசடி செய்தார்.

சிங்கப்பூரரான அந்த 39 வயது ஆடவர், மோசடி மூலம் ஈட்டிய தொகையைச் சூதாட்டத்திற்குப் பயன்படுத்தினார் என்றும் அவர் அந்தத் தொகையைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்பட்டது.

மேலும், 2010ஆம் ஆண்டு முதல், சொத்து தொடர்பான குற்றச்செயல்களில் அவருக்குத் தொடர்பு இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

முதல் நிறுவனத்தில் வேலை செய்தபோது, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, ‘மெர்சிடிஸ்-பென்ஸ்’ கார் வாங்குவதற்காகப் பெண் வாடிக்கையாளர் ஒருவர் 30,785 வெள்ளியை நிறுவனத்திற்குச் செலுத்தினார்.

சீன நாட்டவரான அந்தப் பெண்ணிடம் 2024ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் $278,800ஐச் செலுத்தும்படி தனது வங்கிக் கணக்கு எண்ணை சுவே தந்தார். நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண் மாறிவிட்டதாக வாடிக்கையாளரிடம் அவர் பொய் கூறியது விசாரணையில் தெரியவந்தது.

அதன் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்த அவர், 2024 மே மாதம் மற்றொரு நிறுவனத்தில் வேலைசெய்யத் தொடங்கினார்.

அங்கும் ‘அவ்டி’ கார் விற்பனையின்போது அதேபோன்ற மோசடி நடவடிக்கையில் சுவே ஈடுபட்டார். அதன் மூலம் 62,500 வெள்ளியைத் தனது வங்கிக் கணக்கில் பெற்றுக்கொண்டார். மோசடி குறித்து கடந்த ஜூலை 14ஆம் தேதி, நிறுவன மேலாளரிடம் அவர் ஒப்புக்கொண்டார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு அதிகபட்சம் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்