மோசடிகளின் தொடர்பில் 346 பேரிடம் விசாரணை

1 mins read
8d9bd017-14ed-4e8f-b556-4b023ca22384
பெரும்பாலான சம்பவங்களில், வேலை மோசடிகள், நண்பர் ஆள்மாறாட்ட மோசடிகள், போலி விற்பனையாளர் மோசடிகள், மின் வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள், இணையக் காதல் மோசடிகள் ஆகியவை அடங்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 346 பேர் காவல்துறை விசாரணைகளில் உதவிவருவதாக காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

16க்கும் 76 வயதுக்கும் இடையிலான 231 ஆடவர்களும் 115 பெண்களும் 1,300க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் $13.8 மில்லியன் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான சம்பவங்களில், வேலை மோசடிகள், நண்பர் ஆள்மாறாட்ட மோசடிகள், போலி விற்பனையாளர் மோசடிகள், மின் வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள், இணையக் காதல் மோசடிகள் ஆகியவை அடங்கும்.

ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், உரிமமின்றி கட்டணச் சேவைகளை வழங்குதல் ஆகிய குற்றங்களுக்காக சந்தேகப் பேர்வழிகள் விசாரிக்கப்படுகின்றனர்.

வர்த்தக விவகாரப் பிரிவும் ஏழு காவல்துறை நிலப் பிரிவுகளும் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 29 வரை நடத்திய கூட்டுச் சோதனை நடவடிக்கையில், அந்தக் குற்றச்செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஏமாற்றியதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்துக்கு, பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

மோசடிகள் குறித்து மேல்விவரம் பெற, பொதுமக்கள் www.scamalert.sg எனும் இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற மோசடி எதிர்ப்பு நேரடித் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்