வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட சொகுசுப் படகு ஒன்று செந்தோசாவிற்கு அருகில் திங்கட்கிழமை பிற்பகலில் தரைதட்டி சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பெருஞ்செல்வந்தருமான கிளைவ் பாமர், ‘ஆஸ்திரேலியா’ என்ற பெயரைக் கொண்ட அந்தப் படகுக்குச் சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது திரு பாமர் படகில் இருந்தாரா என்பது தெரியவில்லை.
56 மீட்டர் நீளம் கொண்ட அப்படகு ஏறக்குறைய 40 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$34.7 மில்லியன்) மதிப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதில் ‘ஜக்கூஸி’ குளியல் தொட்டி, மதுக்கூடங்கள் போன்ற சொகுசு அம்சங்கள் உள்ளன.
செந்தோசாவில் வசிக்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ஒருவர், மாலை 5.30 மணிவாக்கில் கடலைப் பார்த்தபோது அந்தப் படகு தரைதட்டி, சிக்கியிருப்பதை உணர்ந்ததாகக் கூறினார்.
தமது பெயரைக் கூற மறுத்த அவர், படகு இருந்த பகுதியில் நிறைய பாறைகள் இருக்கின்றன என்றும் அவற்றில் சில, கடல்மட்டத்தின் அளவு குறையும்போது மட்டுமே காணப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் இத்தகைய சம்பவம் அக்டோபரில் இரண்டாம் முறையாக நடந்திருப்பதாக ‘வொண்டர்லஸ்ட் அட்வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் குவேக் வீ டீ, 45, கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் குறித்து திங்கட்கிழமை மாலை 4.30 மணிவாக்கில் கடல்துறைப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததாக கடல்துறை, துறைமுக ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.
கடலில் தூய்மைக்கேடு எதுவும் இல்லை என்றும் படகு ஊழியர்களுக்குக் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆணையம் சம்பவத்தை விசாரிக்கும் என்றும் அவர் சொன்னார்.

