கைதிகளை ஒப்படைத்தல் தொடர்பான கோரிக்கைகள் 35 விழுக்காட்டிற்கு மேல் அதிகரிப்பு

கைதிகளை ஒப்படைத்தல் தொடர்பான கோரிக்கைகள் 35 விழுக்காட்டிற்கு மேல் அதிகரிப்பு

2 mins read
60843f42-1d0e-42f7-8bbf-1633269c9528
தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங், ஜனவரி 13ஆம் தேதி உச்ச நீதிமன்ற அரங்கில் நடைபெற்ற சட்ட ஆண்டுத் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்துலக அளவிலான தலைமைச் சட்ட அதிகாரிகள் அலுவலகங்களிலிருந்து சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திற்குச் சென்ற ஆண்டு (2024), கைதிகளை ஒப்படைத்தல், பரஸ்பர சட்ட உதவி ஆகியவை தொடர்பில் 275 கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க இது 35 விழுக்காட்டிற்குமேல் அதிகம்.

தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங், ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்ற புதிய சட்ட ஆண்டின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றியபோது இந்தத் தகவல்களை வெளியிட்டார். சிங்கப்பூர் முக்கிய நிதி நடுவமாக விளங்குவதால், அதன் நிதிக் கட்டமைப்பில் உள்ள நிதி அல்லது சொத்துகள் தொடர்பான உதவி கேட்டுப் பல நாடுகளிடமிருந்து அது கோரிக்கைகளைப் பெறுவதாக அவர் கூறினார்.

தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், 2022, 2023 ஆகிய ஆண்டுகளிலும் பரஸ்பர நிதியுதவி அல்லது குற்றவாளியை ஒப்படைத்தல் தொடர்பில் ஆண்டுக்கு ஏறக்குறைய 200 கோரிக்கைகளைப் பெற்றது. 2024ல் இந்த எண்ணிக்கை 275ஆகப் பதிவானது.

அனைத்துலக அரங்கில் தமது அலுவலகத்தின் பணி குறித்துத் திரு வோங் பேசினார். பருவநிலை மாற்றம், மின்னிலக்கப் பொருளியல், நாடு கடந்த குற்றச்செயல்களுக்கு எதிரான போராட்டம் போன்றவை பற்றி அவர் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு, சிங்கப்பூருக்கும் தென்கொரியா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கும் இடையில் புதிய பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன என்றார் அவர்.

“எல்லை கடந்த குற்றச்செயல்களை ஒருபோதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையைச் சிங்கப்பூர் தக்கவைத்துக்கொண்டுள்ளது. நமது சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் அனைத்துலக நாடுகளுக்கு முழுமையான உதவியை வழங்க சிங்கப்பூர் எப்போதும் தயாராக உள்ளது,” என்றார் திரு வோங்.

சட்ட அமலாக்க அமைப்புகள் 2023ல், சந்தேகத்துக்குரிய 27 பேரிடமிருந்து $3 பில்லியனுக்கும் அதிகமான தொகையைக் கைப்பற்றிய வழக்கு, சிங்கப்பூருக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் கரிமப் புள்ளிகள் பரிமாற்றக் கட்டமைப்புக்கான ஒப்பந்தம் போன்றவற்றில் தமது அலுவலகத்தின் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்