கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதி நான்கு மாதங்களில் மின்சிகரெட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் மின்சிகரெட் வைத்திருந்ததற்காகவும் பயன்படுத்தியதற்காகவும் மொத்தம் 3,534 பேர் பிடிபட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அவர்களில் 3,168 பேர் மின்சிகரெட் குற்றவாளிகள், 366 பேர் கேபோட் குற்றவாளிகள் என்று சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் வியாழக்கிழமை (ஜனவரி 29) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
மின்சிகரெட்டுக்கு எதிரான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த செப்டம்பர் 1 முதல் நான்கு மாதங்களில் அமலாக்க நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மறுவாழ்வுத் திட்டங்களில் மொத்தம் 268 பேர் வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது. அவர்களில் 211 பேர் கேபோட் பயன்படுத்தியோர், 57 பேர் மீண்டும் மீண்டும் மின்சிகரெட் பயன்படுத்தி பிடிபட்டவர்கள்.
கேபோட்டிலும் மின்சிகரெட்டிலும் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் ‘எட்டோமிடேட்’ போதைப் பொருள் உள்ளது என்பதால், அது சிங்கப்பூரில் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ‘சி’ பிரிவு பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி எட்டு பேர் மறுவாழ்வு சிகிச்சையை முடித்துள்ளனர். அவர்களில் எழுவர் எட்டோமிடேட் குற்றங்களுக்காகவும் ஒருவர் மின்சிகரெட் குற்றத்துக்காக மறுபடியும் பிடிபட்டவர்.
15 பேர் தங்கள் மறுவாழ்வுச் சிகிச்சைக்கு குறிக்கப்பட்ட காலத்தில் வரத் தவறிவிட்டனர். அவர்களில் நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்றவர்கள் மேல் விசாரணை அல்லது வழக்குத் தொடுப்பதற்காகக் காத்திருக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான்கு மாதங்களில், எட்டோமிடேட் மின்சிகரெட் உபகரணங்களைக் கடத்தியதாக 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சோதனைச் சாவடிகளில் 41,000க்கும் மேற்பட்ட மின்சிகரெட்களும் அது தொடர்பான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக அறிக்கை சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
அதே காலகட்டத்தில், 4,300க்கும் மேற்பட்ட மின்சிகரெட் நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார அறிவியல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் சமூக ஊடகத் தளத்தில் சட்டத்தை மீறி செயல்பட்ட 1,070க்கும் மேற்பட்ட மின்சிகரெட் தொடர்பான இணையப் பதிவுகள், வலைத்தளங்கள் நீக்கப்பட்டன.
“மின்சிகரெட் பயன்பாட்டை நிறுத்துவதற்கு உதவியும் ஆதரவும் தேவைப்படுபவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்குகிறது,” என்று சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் கூறின.
மின்சிகரெட்டைக் கைவிட விரும்புவோர் ‘க்விட்வேப்’ திட்டத்தில் சேரலாம் அல்லது 1800-438-2000 என்ற சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் உதவி எண்ணில் அழைக்கலாம்.
தாமாக முன்வந்து உதவி நாடுவோர் எவ்வித அபராதங்களையும் எதிர்நோக்க மாட்டார்கள், குற்றப்பதிவும் இருக்காது என்று அவை தெரிவித்தன.
மின்சிகரெட்டுக்கு எதிராக செயலாக்க நடவடிக்கையை அரசாங்கி முடுக்கிவிட்டுள்ளது. செப்டம்பர் 1 அன்று நடப்புக்கு வந்த புதிய சட்டத்தின்கீழ் மின்சிகரெட் விநியோகிப்போர், பயனர்களுக்கான கடுமையான அபராதம்; மின்சிகரெட், எட்டோமிடேட் பயன்படுத்துவோருக்கு கட்டாய மறுவாழ்வு சிகிச்சையும் விதிக்கப்படும். மறுவாழ்வுக்குச் செல்லாதோர் அல்லது முடிக்காதோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
கேபாட் குற்றவாளிகளுக்கு $10,000 வரை அபராதம், ஈராண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மின்சிகரெட் குற்றவாளிகளுக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சட்டவிரோத விளம்பரம், இறக்குமதி, விநியோகம், விற்பனை அல்லது மின்சிகரெட் வைத்திருப்பது குறித்த தகவல்களைக் கொண்டவர்கள் ஹெச்எஸ்ஏ-யின் நேரடிக் கணினித் தொடர்பு அறிக்கை படிவம் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது புகையிலை ஒழுங்குமுறை கிளையை 6684-2036 அல்லது 6684-2037 என்ற எண்ணில் அழைக்கலாம்.

