சிங்கப்பூரில் கடந்த 2024ஆம் ஆண்டு 13,600க்கும் அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.
அதற்கு முந்தைய ஆண்டு பதிவானதைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை 36 விழுக்காடு அதிகமாகும். 2023ல் 9,949 டெங்கிச் சம்பவங்கள் பதிவானதாக தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், வோல்பாக்கியா திட்டம், சமூக அளவில் தொடர்ந்து இருந்துவரும் வலுவான விழிப்புணர்வு ஆகியவை பெரிய அளவில் நோய்ப் பரவல் இடம்பெறும் இடங்கள் உருவாவதைத் தவிர்க்க உதவியிருக்கக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. சென்ற ஆண்டு நடுப்பகுதியில் டெங்கிச் சம்பவங்கள் பொதுவாகக் குறைந்த விகிதத்தில் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
வோல்பாக்கியா திட்டம் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வோல்பாக்கியா கிருமியின் பெயர் அத்திட்டத்துக்குச் சூட்டப்பட்டது.
ஆய்வுக்கூடத்தில் வோல்பாக்கியா கிருமி ஆண் கொசுக்களுக்குள் செலுத்தப்படும். அந்த ஆண் கொசுக்களுடன் பெண் கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்போது அவை இடும் முட்டைகள் குஞ்சு பொறிக்காது.
வோல்பாக்கியா கிருமிகளைக் கொண்ட ஆண் கொசுக்களை டெங்கி அதிகம் பரவக்கூடிய பகுதிகளில் விடும்போது காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதிக்கும் இம்மாதம் நான்காம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 110 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. அதற்கு முந்தைய வாரம் பதிவானதைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை 39 அதிகமாகும்.
கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 6) நிலவரப்படி14 இடங்களில் டெங்கித் தொற்று அதிகம் ஏற்பட்டுவருகிறது. அவற்றில் மூன்று இடங்கள், 10 அல்லது அதற்கும் அதிகமான டெங்கிச் சம்பவங்கள் இருக்கும் ஆக அதிக அபாயம் உள்ள பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அப்பகுதிகள் பிடோக், சிக்ஸ் அவென்யூ, அங் மோ கியோ ஆகிய வட்டாரங்களில் இருக்கின்றன.

